பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 ⚫ போதி மாதவன்

விட்டன. அந்தக் கதைகளிலிருந்து உண்மையான வரலாற்றைப் பார்க்கிலும், அவளிடம் பௌத்தர்களும் மக்களும் கொண்டிருந்த அன்பே அதிகமாக விளங்குகின்றது. அத்தகைய கதைகளிலிருந்து அவளைப்பற்றி அறியத்தக்க சில குறிப்புக்களைக் கவனிப்போம்.

விசாகைக்குத் தக்க வயது வந்ததும், தனஞ்சயர் சிராவஸ்தி நகரிலே பெருந் தனிகராயிருந்த மிகாரர் என்பவருடைய குமாரன் புண்ணியவர்த்தனனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். விசாகை சகல அழகுகளும் பொருந்தியவள். மதிமுகமும், மயில் தோகைபோல் நீண்டு அடர்ந்து வளர்ந்திருந்த கூந்தலும் தங்கநிற மேனியும் பெற்றிருந்த அம்மங்கை நல்லாள் சிராவஸ்தி . நகரின் தலைசிறந்த செல்வருடைய மாளிகைக்கு ஏற்ற மருமகளாகவே அமைந்திருந்தாள். புண்ணியவர்த்தனனும், அவளுக்கு இசைந்த அழகிய மணவாளன்.

திருமணம்

சாகேதத்திலேயே விவாகம் நடைபெற ஏற்பாடாயிற்று. தனஞ்சயர் பொற்கொல்லர்களிடம் வைரங்கள், முத்துக்கள், மற்றும் இரத்தினங்களில் எழுபதுபடி அளந்து கொடுத்து, அழகிய நகைகள் பல செய்து வாங்கினார். திருமணத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே விருந்தினர்கள் வந்து குழுமியிருந்தார்கள். மிகாரருடைய குடும்பத்தினரும் முன்னதாகவே வந்திருந்தனர் எல்லோருக்கும் மேலாகக் கோசல மன்னர் பிரசேனஜித்தும் தமது பரிவாரங்களுடன் நான்கு மாதங்களாகச் சாகேதத்தில் தங்கியிருந்தார். இலட்சக்கணக்கான ஜனங்களுக்கும் தாராளச் சிந்தையுள்ள தனஞ்சயர் முகம் கோணாமல் விருந்தளித்துக் கொண்டிருந்தார். ஒரு சமயம் சமையலுக்கு விறகு போதாமையால், அவர் தமது பழைய