பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298 ⚫ போதி மாதவன்

மளிக்கவும் அனுமதிக்க வேண்டும்’. மிகாரரும் அவற்றிற்கு இசைந்தார்.

விசாகை விரைவிலேயே புத்தர் பெருமானுக்கும் பிக்குக்களுக்கும் தனது மாளிகையில் அன்னமளிக்க எற்பாடு செய்தாள். ஜைனத் துறவிகள், கோடீச்வரரான மிகாரர் புத்தரைச் சந்தித்தால் தங்களை அவர் கைவிட நேரும் என்று கருதி, அவருக்கு ஒரு யோசனை கூறியிருந்தனர். புத்தர் மாளிகைக்கு வருகையில் அவர் தம் கண்களைத் துணியால் கட்டி மூடிக்கொள்ள வேண்டும் என்பதே அந்த யோசனை!

பெருமானும் சீடர்களும் விசாகை அம்மை விருப்போடு அளித்த விருந்தை அருந்திய பின்பு, அவள் தன் மாமனாரையும் பெருமானிடம் அழைத்துச் சென்றாள். பெருமான் அறிவுரை பகர்ந்து கொண்டிருக்கையில், மிகாரர் மனம் களித்து அதிலே மூழ்கியவராய்த் தம் கண்களை மறைத்திருந்த துகிலை எடுத்தெறிந்துவிட்டு, ஐயனைக் கண்குளிரத் தரிசித்தார். அதுமுதல் அவரும் பெருமானுடைய சீடரானார். அவருக்கு இந்தப் பாக்கியம் கிடைப்பதற்கு விசாகையே காரணமாயிருந்ததால், அவர் அவளைத் ‘தாயே!’ என்று அன்புடன் அழைத்தார், இதனால் விசாகைக்கு ‘மிகாரரின் அன்னை’ என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. அன்றிலிருந்து மிகாரரின் மாளிகையில் பௌத்த பிக்குக்களுக்கு மட்டுமே அமுது படைக்கப் பெற்று வந்தது. மிகாரரும் தமது நாற்பது கோடிப் பொன் மதிப்புள்ள செல்வங்களை விதைப்பதற்கு நல்ல நிலம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியடைந்தார்.

விசாகையின் தருமங்கள்

தினந்தோறும் விசாகை மூன்று முறை பௌத்த விகாரைக்குச் சென்று வந்தாள். பகலில் உணவு