பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாகை ⚫ 299

கொண்டு போய் அளித்தாள்; மாலையில் மலர் மாலைகளும் தீபங்களும் கொண்டு சென்றாள். புத்தருக்கும், பிக்குக்களுக்கும் பணிவிடை செய்வதே பெறும் பேறு என்று அவள் கருதி வந்தாள். அவள் தனது செல்வத்தை யெல்லாம் பிக்குக்களுக்காகவும், தருமப் பிரசாரத்திற்காகவும் செலவழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தாள். பிக்குக்கள் தங்குவதற்காக அவள் அமைத்துக் கொடுத்த ஆராமங்களிலே புகழ்பெற்ற முக்கியமான ஒன்று நகரின் கீழ்த்திசையில் இருந்தது. நகருக்குக் கிழக்கே இருந்த தோட்டத்தில் அது அமைந்திருந்ததால், அதற்கு ‘பூர்வ ஆராமம்’ அல்லது ‘பூர்வாராமம்’[1] என்று பெயர் ஏற்பட்டது. புத்தரும், பிக்குக்களும் சிராவஸ்திக்குச் சென்ற காலங்களில் அந்த ஆராமத்திலே நெடு நாள் தங்கியிருப்பது வழக்கம்.

ஒரு நாள் அங்கே சென்று ஐயனைத் தரிசிக்கையில், விசாகை மறு நாள் தனது வீட்டில் பகவரும் சீடர்களும் உணவருந்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பெருமானும் அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

அன்றிரவு பெருமழை பெய்தது. பிக்குக்கள் தங்கள் காவி உடைகள் நனைந்து விடுமே என்று அவிழ்த்து வைத்து விட்டு, மழைநீர் தங்கள் உடல்களிலே படும்படி இருந்து விட்டனர்.

மறு நாள் அண்ணலுக்கும் அடியார்களுக்கும் விருந்தளித்து முடிந்த பின்பு விசாகை ஐயன் அருகிலே அமர்ந்து கொண்டு, தனக்கு எட்டு வரங்கள் அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

சங்கத்தைச் சேர்ந்த அடியார்களுக்கு என் ஆயுள் முழுவதும் மாரிக்காலங்களில் நான் உடைகள் அளித்து


  1. பூர்வம்–கிழக்கு.