பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302 ⚫ போதி மாதவன்

கூடியிருந்தனர். பகவர் அறிவுரை பகர்வார் என்று எல்லோரும் வெகுநேரம் காத்திருந்தனர். ஆனால் பிக்குக்களின் நடுவே அவர் மௌனமாகவே அமர்ந்து கொண்டிருந்தார்.

ஆனந்தர் மெதுவாக எழுந்து தமது உடையால் இடது தோளை மறைத்து முறையாகப் போர்த்துக்கொண்டு, பெருமானிடம் சென்று வணங்கினார். ‘பகவ, இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. பிக்குக்கள் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் பகவர் உபதேசத்தை ஆரம்பிக்கலாமா?’ என்று அவர் வினவினர். ததாகதர் மறுமொழி கூறவில்லை .

இரண்டாவது சாமமும் கழிந்து கொண்டிருந்தது. மீண்டும் ஆனந்தருடைய கேள்விக்கு ஐயனிடமிருந்து பதில் வரவில்லை.

மூன்றாவது சாமத்தில் ஆனந்தர் மூன்றாவது முறையாக விண்ணப்பித்துக் கொண்டார். அப்போது பகவர், ‘கூட்டம் பரிசுத்தமாக இருக்கவில்லை, ஆனந்தா !’ என்றார்.

பெருமான் எவரைப்பற்றி எண்ணி அப்படிக் கூறினார் என்பதை மகா மௌத்கல்யாயனர் சிந்தித்துப் பார்த்தார். கூடியிருப்பவர்களுடைய உள்ளங்களைத் தமது உள்ளத்தால் துருவிப் பார்த்துப் பரிசுத்தமற்றவர் யார் என்பதை அவர் கண்டு கொண்டார். கூட்டத்திலே அமர்ந்திருந்த ஒருவர், முன்னால் திரிசரணங்களைக் கூறித்


    ‘பிராதிமோட்சம்’ என்ற நூல் ஓதப்பெறும்; அதில் கூறப்பெற்றுள்ள விதிகளுக்கு மாறாக நடந்த பிக்குக்கள் தங்கள் குறைகளை வெளிப்படையாகக் கூறி ஒப்புக்கொண்டு, மேற்கொண்டு திருந்திய வாழ்க்கையை அடைவார்கள்.