பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 317

பணிப்பெண்ணிடம் கொடுத்து மாளிகைக்குக் கொண்டு செல்லும்படி கூறிவிட்டு, உபதேசம் கேட்கச் சென்றாள். அந்தப் பணிப்பெண், ஐயனின் அமுதம் போன்ற இன் மொழியைத் தானும் கேட்கலாம் என்று அதுவரை களித்திருந்தாள். ஆனால் அவளுக்கு அந்தப் பேறு கிடைக் காமற் போகவே, வழியிலே அவள் மனத்துயரால் மடிந்து போனாளாம்! புத்தர் அன்று வந்த பெண்களுக்குத் தருமத்தைப் பற்றி விளக்கிக் கூறினார்.

ஆயினும், பெண்கள் பிக்குணிகளாவதை அவர் அனுமதிக்க இசையவில்லை அவருடைய சிற்றன்னை கௌதமியோ, சிறிதும் மனம் கலங்காது, எப்படியும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டு, காலம் கருதிக் காத்திருந்தாள். பெருமான் நியக்குரோத வனத்திலே சில நாட்கள் இருந்து விட்டு மீண்டும் வைசாலியை நோக்கிப் புறப்பட்டார். வழியிலே பல இடங்களில் தங்கித் தருமப் பிரசாரம் செய்து கொண்டே சென்று, மகாவனத்தை அடைந்தார்.

அன்னை கௌதமி, புத்தர் வைசாலியிருப்பதை அறிந்து தானும் அங்கே புறப்பட்டாள்

அவள் தன் கூந்தலைச் சிரைத்து விட்டுக் காவியுடை அணிந்து கொண்டு, தன்னைப் போலவே துறவுக்கோலம் பூண்ட வேறு பல சாக்கியப் பெண்களுடன் வழிநடை கொண்டாள். வாழ்நாள் முழுவதும் அரண்மனைகளிலே கண்ணாடி போன்ற பளபளப்புள்ள மென்மையான தரையில் மிதிப்பதிலே கூடக் கால் வருந்தக் கூடிய கௌதமி கல்லும் மண்ணும் நிறைந்த சாலை வழியாக நடந்தே செல்ல வேண்டும் என்று தீர்மானித்தாள். கோலிய மன்னரின் கோமளக் குமாரி, மா நிலம் போற்றும் சுத்தோதன மன்னரின் மகாராணி புத்தரைப் போற்றி வளர்த்த உத்தமி காட்டு வழிகளிலும் கிராமப்புறங்-