பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ⚫ போதி மாதவன்

அவன் பூரணஞானம் பெற்று உலக குருவாக விளங்குவானென்றும், இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடைபெறுமென்றும் அவர்கள் மகாராஜாவுக்கு விளக்கிச் சொன்னார்கள். அவர்கள் இரண்டாவதாகக் கூறிய பலனை எண்ணுந்தோறும் மன்னர் பெருந்துயரடைந்தார். ஆயினும், மைந்தனின் மதிமுகத்தைப் பார்த்துப் பார்த்து மனத்துயரை மறந்து வந்தார்.

மாயாதேவியின் மறைவு

கருவுயிர்த்த ஏழாம் நாளில் அன்னை மாயாதேவி புன்னகையோடு அருந்துயில் கொண்டவள் மீண்டும் கண்ணை விழிக்கவேயில்லை. உறங்கிய வண்ணமே, யாதொரு நோயும் நொம்பலமுமின்றி, அவள் துறக்கம் சென்றடைந்து விட்டாள். உலகிலே வாழை, நண்டு, சிப்பி முதலியவை சூல் கொண்டு கருவுயிர்த்தபின் மரணமடைதல் போலவே, புத்தர்களைப் பெறும் அன்னையரும் பின்னால் வாழ்வது வழக்கமில்லை என்பர். மேலும், அறிவுக்களஞ்சியமான புத்தரைப் பெற்ற தாய் பின்னால் வேறு சூல் கொள்வதுமில்லை. மாயாதேவி கருவுற்றிருந்த, பத்துத் திங்களிலும் எல்லையற்ற இன்பப்பேற்றை அடைந்திருந்தாள். குழந்தை பிறந்த பின்பு அவ்வின்பம் போய்விட்டது. அத்துடன் போதிசத்துவர் பூமியில் அவதரித்ததிலிருந்து அவள் கண்ட அற்புதங்களும் அதிசயங்களும் அவளை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியிருந்தன. ஆனால், பேரழகும், பெருஞ்செல்வங்களும் பெற்றிருந்த அந்த வீரத்திருமகன் அரசுரிமை துறந்து, ஆண்டியாகித் துறவுக் கோலத்தில் துலங்குவானென்று சோதிடரும் மற்றோரும் கூறுவதைக் கேட்டு, அத்தகைய காட்சி நேரும்போது அவள் எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்! இத்தகைய காரணங்களால், அவள் தன் சகோதரி கௌதமியிடம், ‘புத்தரைப் பெற்ற மாதா பின்னால் வேறு குழந்தையை ஒருகாலும் பெறமாட்டாள்.