பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 31

நான் விரைவில் இவ்வுலகையும், என் கணவராகிய மன்னரையும், என் குழந்தை சித்தார்த்தனையும் விட்டுச் செல்வேன். நான் போன பின்பு நீயே குழந்தையின் தாயாயிருந்து பேணி வளர்த்து வரவேண்டும்!’ என்று கூறியிருந்தாள். கௌதமி கதறிக் கண்ணீர் வடித்துக் கொண்டே ‘சரி’ யென்று உறுதி கூறினாள்.

சாக்கியரிற் பல பெரியோரும் அவளே சித்தார்த் தனுக்குக் தாயாயிருக்க விரும்பினர். அவ்வாறே கௌதமி, சிற்றன்னையாயில்லாமல், பெற்றவள போன்ற அன்புடனே குழந்தையை ஏற்றுக் கொண்டாள். அதைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றி வந்தாள். குழந்தையும் வளர் பிறை, மதியம் வளர்வது போல எழிலுடன் வளர்ந்து வந்தது.

குழந்தையின் நலனை எண்ணுந்தோறும் சுத்தோதனரின் மனம் மேலும் மேலும் தருமப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. இராஜ்யத்திலுள்ள கைதிகள் யாவரையும் அவர் விடுதலை செய்தார். கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றவர்களையும் விடுவித்து, மேற்கொண்டு அறவழியில் நடக்கும்படி ஆதரவோடு உபதேசஞ் செய்தனுப்பினார். தமது தருமங்கள் யாவும் குழந்தையின் சேமநிதியென்று அவர் கருதினார். தெய்வங்களுக்கெல்லாம் அவர் பிரார்த்தனை செய்தார். ஆலயங்களனைத்திலும் அர்ச்சனைகள் செய்துவர ஏற்பாடு செய்தார். நூறாயிரம் அந்தணர்களுக்கு உயர்ந்த கறவைப் பசுக்களைத் தானம் செய்தாரென்றும் கதைகள் கூறுகின்றன.

போதிசத்துவர் பிறந்த புனித பூமியாதலால் சாக்கிய நாட்டிலே பஞ்சமும் வறுமையும் நீங்கிச் செல்வம் கொழித்துக் கொண்டிருந்தது. மக்கள் அச்சமின்றி இன்பமாக வாழ்ந்து வந்தனர். எங்கும் அமைதி நிலவியிருந்தது. அந்நாட்டிலே புலன்களின் இன்பத்திற்காகக் காதலை