பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328 ⚫ போதி மாதவன்

இரண்டு அவதூறுகள்

சிராவஸ்தியிலே பகவருக்கும் பிக்குக்களுக்கும் நாள் தோறும் செல்வாக்கு வளர்ந்து வருவதையும், ஆயிரக் கணக்கான மக்கள் காலையிலும் மாலையிலும் ஜேதவன விகாரையில் திரளாகக் கூடி அறவுரை கேட்டு வருவதையும் கண்டு புறச்சமயிகளில் முக்கியமான ஜைனக் துறவிகள் சிலர் அழுக்காறு அடைந்தனர். அவர்கள் எவ்வளவு எதிர்ப்பிரசாரம் செய்யினும், போதி மாதவரின் அருளுருவமும், அருட்செய்தியும் மக்கள் மனங்களை வசீகரித்துக்கொண்டிருந்தன. எனவே அத்துறவிகள் முறை யற்ற சூழ்ச்சிகளிலும், சதிகளிலும் ஈடுபடலாயினர்.

அவர்களோடு இருந்துவந்த சந்நியாசினியான சிஞ்சை என்பவள் அவர்களுடைய கைக்கருவியாக அமைந்து, புக்க பகவரைக் கேவலப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். ஒருநாள் மாலை பகவர் ஜேதவன விகாரையில் பெருங்கூட்டமான மக்களுக்கும் சீடர்களுக்கும் சமய சம்பந்தமான விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில், அவள் திடீரென்று அங்கே சென்று உரக்கப் பேசினாள். ‘நீர் ஒரு துறவி; உபதேசம் செய்துகொண்டிருக்கிறீர்; உமக்க இனிமையான நல்ல குரல் இருக்கிறது; உருவத்திலும் அழகாயிருக்கிறீர்! உம்மால் எனக்குக் கர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது; எனது பிரசவத்திற்கு வேண்டிய இடவசதி கூட நீர் இன்னும் செய்யவில்லை! பேறுகாலத்திற்கு வேண்டிய சுக்கு, மிளகு ஒன்றுமில்லை! நீரோ புத்தர். அநாத பிண்டிகர், விசாகை போன்ற பணக்காரர்களும் பணக்காரிகளும் உமக்குச் சிநேகமானவர்கள். அவர்களிடம் சொல்லியாவது எனக்கு உதவி புரிய ஏற்பாடு செய்யக்கூடாதா?’ என்று அவள் சரமாரியாகப் பேசினாள்.

மாதவர் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, அவளைப் பார்த்து ‘சிஞ்சி! உன் வார்த்தைகள் உண்மை-