பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 329

யாகவே இருக்கட்டும்; ஆனால் நீ கூறுவது உனக்கு, மட்டும் தெரிந்த உண்மையாக இருக்கிறதே! அது உனக்கும், எனக்கும் தெரிந்ததாக இருக்கவேண்டாமா?’ என்று கேட்டார். ‘நியாயமானவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளே சத்தியமானவை. இப்போது எனது பிரசவத்திற்கும், மருத்துவத்திற்கும் ஏற்பாடு செய்வதே உமது முதல் வேலை! இங்கே உபதேசம் செய்து, மக்களின் மனங்களைக் கலக்கிக்கொண்டிருப்பதில் பயனில்லை!’ என்று பரிகாசத்துடன் கூறினாள் சிஞ்சை.

இதைக் கேட்டு மக்கள் மனம் கலங்கினர். சிஞ்சையின் வயிற்றைப் பார்த்தால், அவள் நிறைந்த சூல்கொண்டவள் என்று தோன்றிற்று. ஒரு சந்நியாசினி, கருவுற்று, மகா சபையின் நடுவே வந்து பகவர் மீது குற்றஞ் சாட்டியது யாவர்க்கும் வியப்பும் திகைப்புமாகவே இருந்தது.

அந்த நேரத்தில் தேவர்களுடைய சூழ்ச்சியால் அவளுடைய முதுகில் சேலைக்குள் சில சுண்டெலிகள் சென்று அங்கிருந்த துணி முடிச்சுக்களைக் கருவிக் கத்தரித்துவிட்டன. அவள் வயிற்றோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்த மரக்கட்டைகள் திடீரென்று கீழே விழுந்துவிட்டன. சிஞ்சை மருத்துவ உதவி இல்லாமலே இவ்வாறு பிரசவித்து விட்டாள்!

மக்கள் பெருங் கோபமடைந்து அவளை விரட்டிக் கொண்டு சென்று அடித்தனர். முடிவில் அவள் நிரயத்தை அடைந்ததாக ‘சத்தர்ம ரத்னாகரம்’ என்ற நூல் கூறுகின்றது. சிஞ்சையின் செயலால் பகவரின் புகழ் அதிகரிக்க லாயிற்று.

போ -21