பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 331

யைத் தூண்டி, அவளையும் கொலை செய்ய ஏற்பாடு செய்த புறச் சமயத் துறவிகளின் விவரம் அனைத்தும் வெளியாயிற்று. அவர்களுக்கும், கொலைஞர்களுக்கும் உரிய தண்டனை விதிக்கப் பெற்றது.

பழைய பிதாவும் மாதாவும்

ஞானமடைந்த பின் எட்டாம் ஆண்டில் புத்தர் யாத்திரை செய்து வருகையில் சும்சுமாரகிரி என்ற நகருக்குச் சென்றிருந்தார். அங்கே இல்லறமாகிய நல்லறம் நடத்திக் கொண்டிருந்த நகுல பிதா, நகுல மாதா என்ற தம்பதிகள் அவரைத் தரிசித்து, ‘இவனே நமது மகன்!’ என்று கூறி, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினர். முன்னம் பல பிறவிகளில் அவர்கள் இருவரும் ஐயனுக்குப் பிதாவாகவும், மாதாவாகவும் விளங்கியதை அவரும் அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஞான உபதேசம் செய்தார்.

கௌசாம்பி

ஒன்பதாம் ஆண்டில் ஐயன் கௌசாம்பி நகரை அடைந்தார். இராமாயணம், மற்றும் புராணங்களி லெல்லாம் சிறப்பாக வருணிக்கப் பெற்றது இந்நகரம். நகரமக்கள் ஐயனை உவகையுடன் வரவேற்று, அவர் அறவுரைகளைக் கேட்டு வந்தனர். பலர் பௌத்த தருமத்தை மேற்கொண்டனர், அரசன் உதயணனும், அச் சமயத்தை தழுவிக்கொண்டு, தன் குமாரன் இராஷ்டிரபாலன் பிக்கு ஆவதற்கும் அனுமதியளித்தான். இவ்வாறு கௌ சாம்பி சென்ற முதல் வருடத்தில் புத்தர் பெருமான் பெரு மகிழ்சிச்யுடன் அங்குப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் அடுத்த ஆண்டில் மௌத்கலி என்ற பிக்குவால் பௌத்த சங்கத்துள் பிளவு தோன்றி, அதனால் பெருமானுக்கு மிக்க வருத்தம் ஏற்பட்டது.