பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340 ⚫ போதி மாதவன்

காட்டுவது போலவும், இருளில் ஒளிவிளக்கைப் பிடித்துக் கொண்டு கண்ணுள்ளவர்களுக்குப் பார்வை அளிப்பது போலவும் விளங்குகின்றன தங்கள் வார்த்தைகள்... நான் இப்போதே புத்தர், தருமம், சங்கம் ஆகிய மூன்று அடைக்கலங்களையும் மேற்கொள்கிறேன்!’ என்று மன உருக்கத்தோடு கூறினார்.

உடனே மிக உயர்ந்த உணவுகளை எடுத்து வரச் செய்து, அவர் உள்ளக் களிப்போடு அண்ணலை அருந்தும் படி வேண்டினார். ஆனால் பெருமான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை; தரும உபதேசம் செய்த பின்பு எதையும் காணிக்கையாகப் பெறுவது உசிதமன்று என்று மறுத்து விட்டார். இல்லாவிடில், பாணர்களும், நடிகைகளும் தங்கள் இசையும் நடனமும் முடிந்தவுடன் பணம் வசூலிப்பது போன்ற முறையில் அறவுரையையும் கருத நேரிடும் என்பது அவர் உள்ளக் கருத்து.

பின்னர் காசி பாரத்துவாஜர் புத்தர் பெருமானுடைய விகாரைக்குச் சென்று பிக்குவாகி, மேனிலை அடைந்து விளங்கினார்.

இயக்கன் ஆலவிகன்

பின்னர் பெருமான் நான்கு ஆண்டுகள் கோசல நாட்டிலும், காசி, வைசாலி, சிராவஸ்தி முதலிய இடங்களிலும், சாலிகை என்ற மலையிலும் யாத்திரை செய்து அற உரைகள் நிகழ்த்தி வந்தார். இக்காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளின் விவரங்கள் தெரியவில்லை. சிராவஸ்தியில் இராகுலனுக்குக் காஷாய உடையளித்து அவனைப் பிக்குவாகச் சேர்த்துக் கொண்டதும்[1] யசோதரையின் தந்தையாகிய சுப்பிரபுத்திரர் போதிநாதரைச்


  1. அப்போது இராகுலனுக்கு வயது இருபது.