பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 339

சந்தித்ததும் இங்கே குறிக்கத்தக்க நிகழ்ச்சிகளாம். சுப்பிரபுத்திரர் கோபத்தோடு சிராவஸ்திக்கு வந்து, தம் அருமைக் குமாரி யசோதரையைப் பெருமான் துறந்ததற்காக அவரை வாய்க்கு வந்தபடி ஏசியதாகவும், உடனே அவர் நின்ற இடத்தில் பூமி வெடித்து அவர் பாதாளத்திற்குச் செல்ல நேர்ந்தது என்றும் புத்த சரித்திரங்கள் கூறுகின்றன.

ஞானமடைந்த பதினாறாம் ஆண்டில் பெருமான் ஆலவி என்னும் நகருக்குச் சென்றிருந்தார். அந்நகருக்கு அருகேயிருந்த அடவியில் ஓர் ஆலமரத்திலே ஆலவிகன் என்ற இயக்கன் தன் உருவை மறைத்துக் கொண்டு வசித்து வந்தான். அவன் அசுரகுணம் படைத்தவன். முன்பு ஒருநாள் அடவியிலே வேட்டையாட வந்த ஆலவி மன்னன் இயக்கனுடைய ஆலமரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கையில், அவன் மன்னனைப் பற்றிக்கொண்டு கொலை செய்ய முயன்றான். அப்போது மன்னன், தன்னை விட்டு விடும்படியும், தான் நகருக்குத் திரும்பியதும் நாள்தோறும் ஓர் இளைஞனை அவனுக்கு உணவாக அனுப்புவதாகவும் கூறினான். அதற்கு அவன் இசைந்து மன்னனை விட்டு விட்டான். அதுமுதல் மன்னன் தினந்தோறும் ஓர் இளைஞனை இயக்கனுக்குப் பலியாவதற்காக அனுப்பி வந்தான் இவ்வாறு பல்லாண்டுகள் நடந்து வந்ததால், நகரின் மக்கள் பலர் இராஜ்யத்தை விட்டே ஓடி விட்டனர். கடைசியாக ஒரு நாள் மன்னன் தன் மைந்தனையே ஆலவிகரிடம் அனுப்ப நேர்ந்தது.

அந்தச் சமயத்தில் ஆலவியிலிருந்த புத்தர் பெருமான் மன்னனின் மைந்தனைக் காப்பாற்றி ஆட்கொண்டு, ஆலவிகனுக்கும் அருளுரை புகலவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார். வனத்திலே பெரியதோர் ஆலமரத்தின் அருகே பூமிக்குள் அமைந்திருந்த