பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340 ⚫ போதி மாதவன்

இயக்கனுடைய மாளிகையை அடைந்து, அவர் அதனுள் சென்று அவனுடைய ஆசனத்திலே அமர்ந்துகொண்டார். இயக்கன் அப்பொழுது வெளியே போயிருந்தான். பின்னால் அவன் மாலையில் திரும்பி வந்ததும், உள்ளே வல்லமை மிக்க துறவி ஒருவர் அமர்ந்திருப்பதை அறிந்து, அவரை எதிர்க்கத் துணிந்தான். புயல், மழை, அனல் முதலியவற்றால் புத்தரை வெல்ல முயன்றான். அன்றிரவு முழுவதும் அவனுக்குத் தெரிந்த வித்தைகளை யெல்லாம் செய்து பார்த்தான். கருணை வள்ளல் அவன் தன் செயல்களால் தானாகவே களைத்து வரட்டும் என்று, காத்திருந்தார். கடைசியில் அவன் இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்ற கொடுமையான ஆயுதம் ஒன்றை ஐயன்மீது எறிந்தான். அதுவும் பயனற்றுப் போகவே, அவன் வெகுளியை விட்டுச் சாந்தமடைந்து, போதி நாதரின் பெருமையை உணர்ந்துகொண்டான். அமலர் அன்பு காரணமாகவே அங்கு வந்திருந்ததை அறிந்து, அன்பை அன்பினாலேயே வெல்ல முடியும் என்று கருதித் தன் இடத்தைக் காலி செய்து தரும்படி ஐயனை வேண்டினான். உடனே பெருமானும் எழுந்திருந்து அங்கிருந்து அகன்றார்.

இயக்கன் மீண்டும் அவரை அழைத்துத் தான் கேட்கும் வினாக்களுக்கு அவர் பதிலுரைக்க வேண்டும் என்று கூறினான். அவ்வாறே அவன் வினாக்களுக்கு. ஐயன் தக்க விடைகூறி அவனுக்கு ஞானச்சுடர் உண்டாகும்படி அருளினார் ஆலவிகன் அவரிடம் தரும். உபதேசமும் பெற்றான். அந்தக் கணத்திலிருந்து அவன் வாழ்க்கை திருந்திவிட்டது. அவன் புத்த தேவரை வணங்கிக்கொண்டிருக்கும்போது, ஆலவி மன்னரின் மைந்தனை அரசாங்க அதிகாரிகள் முறைப்படி அங்கே. கொண்டுவந்து சேர்த்தனர் அங்கு இயக்கன் பகவரை வணங்கிக்கொண்டிருந்த நிலைமையைக் கண்டு அவர்கள்