பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 343

அங்குலிமாலன் கொள்ளைக்காரனாயிருந்ததுடன், பெரிய கொலைகாரனாயும் விளங்கினான். இரக்கம் என்பதை அவன் அறியான் அவன் கொடுமையைத் தாங்காமல் அநேகம் கிராமங்களும் நகரங்களுமே பாழாகிக் கிடந்தன. சிராவஸ்திக்கு அருகே ஒரு வனத்தில் தங்கியிருந்து கொண்டு அவன் அந்த வழியாக வருகிறவர்களைக் கொள்ளையிட்டும், கொலை செய்தும் வந்தான். அவனால் கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு மனிதருடைய விரல்களிலும் ஒன்றை வெட்டி, அப்படிச் சேர்ந்த விரல்களை யெல்லாம் மாலையாகத் தொடுத்து அவன் அணிந்திருந்தான். அதனால்தான் அவனுக்கு, ‘விரல்மாலை அணிந்தவன்’ என்று பொருள்படும் ‘அங்குலி மாலன்’[1] என்ற பெயர் வந்ததாம்.

புத்தர் அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கருதிய தினத்தில், காலையில் ஐயம் ஏற்றுவந்து, உண வருந்திய பின், அவர் உடையணிந்து, திருவோட்டை எடுத்துக் கொண்டு தனியாக வெளியே புறப்பட்டார். வழக்கமாக அந்த நேரத்தில் அவர் சிறிது ஓய்வெடுத்துக் கொள்வதையும் அன்று நீக்கிவிட்டார்.

அவர் வனத்தில் நுழையும்போது, ஆடு மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஆயர்களும், விறகு வெட்டிக் கொண்டிருந்தவர்களும் அவர் அவ்வழியாய்ச் செல்ல வேண்டாம் என்று கூவினார்கள். யாரோ துறவி அங்குலி மாலனிடம் உயிரைப் பலி கொடுப்பதற்காகச் செல்வதாக அவர்கள் எண்ணி, அவனைப்பற்றிப் பெருமானுக்கு எச்சரிக்கை செய்தார்கள். பெருமான் மௌனமாகச் சென்று கொண்டேயிருந்தார். அவர்கள் மீண்டும் இருமுறை எச்சரிக்கை செய்தும் பயனில்லை. இருபது, முப்பது, நாற்பது பேர்கள் சேர்ந்து சென்றாலும், அங்குலிமாலனிடம் தப்பி


  1. அங்குலி-விரல்; மாலன் - மாலையுடையவன்.