பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344 ⚫ போதி மாதவன்

வர முடியாது என்று அவர்கள் உரக்கக் கூவினார்கள். ஆனால் ஐயன் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. தமது நடையையும் நிறுத்தவில்லை. அவர் வனத்துள் சிறிது தூரம் சென்றவுடன் அங்குலிமாலன் அவர் வரவைத் தொலைவிலிருந்தே கவனித்துவிட்டான். ஒரே துறவி தனிமையாக நடந்து செல்வதைக் கண்டதும், அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். உடனே உடைவாளையும், அம்புகளையும், வில்லையும் எடுத்துக்கொண்டு, அவன் போதிவேந்தரைத் தொடர்ந்து பின்செல்லலானான்.

பத்தர் வழக்கம்போல் நிதானமாகவே நடந்துகொண்டிருந்தார். ஆயினும் திருடன் அவரை எட்டிப் பிடிக்க முடியவில்லை அவன் எவ்வளவு வேகமாக நடப்பினும், அவருக்குப் பின்னால் தூரத்திலேயே தான் இருப்பதை உணர்ந்துகொண்டான். பெருமான் தமது ஆற்றலால் அவன் மனத்தை வசியப்படுத்தி, அவனது நடையைத் தளர்த்திவிட்டார். ‘இதுவரை யானை, குதிரை, மான், வண்டி முதலியவை முழுவேகத்தில் செல்லும்போதும், நான் அவைகளை எட்டிப் பிடித்து விடுவேன்; ஆனால் இப்போது இந்தத் துறவியைப் பிடிக்க முடியவில்லையே! இவர் சாதாரணமாகவே நடந்து கொண்டிருக்கிறார்; அப்படியிருந்தும் நான் பின் தங்கியே நிற்கிறேன்!’ என்று அவன் கருதினான்.

உடனே அவன் நடையை நிறுத்திக் கொண்டு ஐயனைக் கூவி அழைத்து, அவரும் நடையை நிறுத்தும்படி உரக்கக் கூறினான்.

புத்தர்: நான் நடையை நிறுத்தியாயிற்று; நீயும் நிறுத்திவிடு!

அங்குலிமாலன் : நடையை நிறுத்திவிட்டதாகச் சொல் லிக்கொண்டே நடக்கிறீர்களே! நான் நிற்கத்தான் செய்-