பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 345

கிறேன்; எனினும் “நில்லு” என்று சொல்கிறீர்களே! நீங்கள் நிற்பதாகச் சொல்வதும், நான் நிற்காததாகச் சொல்வதும் ஒன்றும் விளங்கவில்லையே!

புத்தர் : நான் நடையை நிறுத்திவிட்டேன். ஒரு போதும் நான் எவரிடத்தும் பலாத்காரம் செய்வதில்லை. தீயவினை அனைத்தையும் நான் நிறுத்திவிட்டேன். நீயோ இன்னும் உயிர்க் கொலை புரிகிறாய்! நான் நிறுத்திவிட்டேன். நீதான் நிறுத்தவில்லை! அங்குலிமாலன் திகைத்து விட்டான். ‘இந்த முனி எப்படியோ என்னையும், என் செயலையும் தொடர்ந்து கண்டு பிடித்துவிட்டார்!’ என்று ஆச்சரியமடைந்து, ‘தேவா! உமது புனித உதவியால் அடியேன் தீவினைகளையெல்லாம் கைவிடத் துணிந்து விட்டேன்!’ என்று கூறினான். உடனே தன்னிடமிருந்த ஆயுதங்களையெல்லாம் மிகவும் ஆழமாயிருந்த ஒரு பள்ளத்தாக்கில் எறிந்துவிட்டான். பின்னர் பெருயும் மானிடம் சென்று அவர் திருவடிகளை வணங்கித் தன்னை ஆட்கொண்டு அருளவேண்டும் என்று கெஞ்சினான்.

புத்த தேவர் கல்லும் கனிந்துருகும்படி நின்ற அக் கள்வனைக் கருணையுடன் பார்த்து, ‘பிக்கு! என்னைத் தொடர்ந்து கூடவா!’ என்று சொல்லித் திரும்பி நடந்தார். அந்தக் கணத்திலேயே அங்குலிமாலன், மஞ்சள் உடையும், முண்டிதமான தலையும் பெற்றுப் பிக்குவாகி ஐயனைப் பின்தொடர்ந்து ஜேதவனம் சென்றான்.

மறு நாள் காலையில் மன்னர் பிரசேனஜித்து ஜேதவன விகாரைக்குச் சென்று பகவரைச் சந்தித்தார்.

புத்தர், திடீரென்று காலையில் அரசர் வந்திருந்ததைக் கண்டு, என்ன விஷயம் என்று விசாரித்தார். ‘மகத மன்னர் பிம்பிசாரர் படையெடுத்து வந்துள்ளாரா?

போ -22