பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 347

அரசர் அங்குலிமாலனிடம் சென்று வணங்கி ‘புனிதரே! ‘தாங்கள் தாம் உண்மையில் அங்குலிமாலரா? என்று வினவினார்.

‘ஆம்!’ என்று பதில் வந்தது.

அரசர், ‘தாங்கள் சந்தோஷமாயிருக்கலாம்; தங்களுக்குத் தேவையுள்ள பொருள்களையெல்லாம் நானே அனுப்பி வருவேன்!’ என்றார்.

அப்போது அங்குலிமாலன். ‘ஏற்கெனவே என்னிடம் மூன்று காஷாயத் துணிகள் இருக்கின்றன.[1] எனக்கு வேறு எதுவும் தேவையில்லை!’ என்று கூறினான்.

அதைக் கேட்டு மன்னர் அதிசயப்பட்டுப் பெருமானிடம் சென்று, ‘ஆச்சரியம்! ஆச்சரியம்! வாளாலும் வேலாலும் நான் அடக்க முடியாத ஒருவன் இதோ இங்கே வந்திருக்கிறான். ஆனால் எவ்வித ஆயுதமும் இல்லாமல் மகாபிரபு அவனை ஆட்கொண்டு அருள் புரிந்திருக்கிறார்!’ என்று அவரை வாயார வாழ்த்தினார்.

அப்போது அங்குலிமாலன், ‘கத்தியும் - கம்பும் இல்லாமலே கருணை வள்ளல் என்னைத் திருத்திவிட்டார். இரத்த வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த என்னைப் பெருமான் வந்து காப்பாற்றிவிட்டார்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.[2]


  1. மூன்று உடைகளுக்கு மேல் ஒரு பிக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது விதி.
  2. அங்குலிமாலனின் இந்த வரலாறு ‘மஜ்ஜிம நிகாயம்–அங்குலி மால சூத்திரம்’ என்ற பகுதியிலுள்ளது.