பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினெட்டாம் இயல்

தேவதத்தனும் அஜாதசத்துருவும்

‘அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை
எரிசுடர் மரைமலர் எனவிடும் அடியினை!
அகலிடம் முழுவதும் அழல்கெட அமிழ்துமிழ்
முகில்புரி இமிழ் இசை நிகர்தரும் மொழியினை!’

தேவதத்தன் கோலிய மன்னரான சுப்பிரபுத்தரின் மைந்தன், புத்த பகவருடைய மைத்துனன், அநுருத்தன் முதலானோருடன் அவன் சங்கத்தில் சேர்ந்ததிலிருந்தே, மற்றவர்களைப்போல், ஒழுக்க முறைகளிலும், தியான முறைகளிலும் கருத்தில்லாமல், பெருமானுக்கு ஏற்பட்டு வரும் மரியாதைகளையும் புகழையும் கண்டு பொறாமைப் பட்டுக் கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் புத்தரிடம் சென்று தனக்கு இருத்தி முறையைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டான் அவர் மறுத்துவிட்டார். ‘விநய ஒழுக்க முறைப்படி நீ நடந்து வந்தால் மெய்யறிவும், இருத்தி ஆற்றலும் தாமாகவே உண்டாகும்’ என்று அவர் கூறி அனுப்பினார்.

பிறகு தேவதத்தன் கௌண்டின்யர், அசுவஜித், பத்ரிகர் முதலியோரிடம் சென்று வேண்டினான். அவர்களும் அஷ்டாங்க மார்க்கத்தின்படி அவன் நற்காட்சி முதலிய படிகளில் பயிற்சி பெறவேண்டும் என்று கூறியனுப்பினர். அதன்பின் அவன் தசபால காசியபரிடம் சென்றான். மகா ஞானியாகிய அம்முனிவர் அவனுக்கு இருத்தி பெறுவதற்குரிய வழிகளை விளக்கிக் கூறினார். அது முதல் அவன் ஊண், உறக்கம் முதலியவைகளைக் கூடக் கவனியாமல் தியானத்திலே அமர்ந்திருந்தான். விரைவிலே அவனுக்கு இருத்தி ஆற்றலெல்லாம் உண்டாகி