பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 351

விருப்பம் ஒன்றைத் தெரிவித்தான். இறைவ! பகவருக்கு இப்போது வயதாகிவிட்டது; வாழ்வின் கடைசிப் படியை எட்டியாகிவிட்டது. இனிப் பகவர் கவலையில்லாமல் ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டிய காலம். பிக்குக்களின் சங்கத்தை என்னிடம் ஒப்படைத்தால், நான் கவனித்துக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்!’ என்று அவன் கூறினான் அதற்குப் பகவர், ‘போதும், தேவதத்தா! பிக்குக்களின் சங்கத்தை ஏற்று நடத்த நீ விரும்ப வேண்டாம்!’ என்று சொல்லிவிட்டார்.

இரண்டு, மூன்று முறைகள் தேவதத்தன் தன் வேண்டுகோளைக் கூறினான். முந்திய மறுமொழியையே பகவர் திரும்பச் சொல்லிவிட்டு, ‘சாரீபுத்திரர், மகா மொக்கல்லானா (மௌத்கல்யாயனர்) ஆகியவர்களிடமே சங்கத்தைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஒப்படைக்க மாட்டேன்; எச்சில் பொறுக்கி உண்ணும் தீயோனாகிய உன்னிடமா ஒப்படைக்க முடியும்!’ என்று தெரிவித்தார்.

அப்போது அரசரும், அதிகாரிகளும், பல பிக்குக்களும் பகவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர். எல்லோருடைய முன்னிலையிலும் பகவர் தன்னை இழிவுபடுத்தியும், சாரீ புத்திரரையும் மொக்கல்லானாவையும் உயர்வுபடுத்தியும் பேசியதை அவனால் தாங்கமுடியவில்லை. அவன் பகரை வணங்கிவிட்டு வெஞ்சினத்தோடு வெளியேறினான்.

பிம்பிசாரரின் சிறைவாசம்

அஜாதசத்துரு தேவதத்தனுடைய ஆலோசனைப்படி தன் தந்தையைத் தானே கொன்றுவிடவேண்டும் என்று பலநாள் முயன்றான். ஆனால் அதற்கு மனம் வரவில்லை. ஆதலால் அவரைச் சிறையில் அடைத்துவிட்டுத் தான் சிம்மாசனம் ஏறினான். பிம்பிசாரர் உயிரோடிருப்பதில் தேவதத்தனுக்கு மிக்க வருத்தம் ஏற்பட்டது. எனினும்