பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354 ⚫ போதி மாதவன்

அவர் மீது உருட்டி விட வேண்டும் என்றும் தேவதத்தன் ஏற்பாடு செய்தான். அதற்கு வேண்டிய எந்திரங்களும் அமைக்கப் பெற்றன. ஆனால் பாறை பகவர் தலைக்கு நேராகக் கீழே விழுந்த சமயத்தில், அது இரு துண்டு களாகி ஐயனின் இரண்டு பக்கங்களிலும் விலகிப் போய் விழுந்தது. எனினும் அதிலிருந்து சிதறிய சிறு கற்கள் ஐயனின் பாதத்தில் பட்டதால் புண் ஏற்பட்டது. அதனை அரசனுடைய புகழ்பெற்ற வைத்தியராயும், பகவரிடம் பக்தி கொண்ட சீடராயும் விளங்கிய ஜீவகர் மருந்திட்டுக் குணப்படுத்தி விட்டார்.

தேவதத்தன் மனிதரை ஏவிப் பகவரை அழிக்க முடி யாது என்று கண்டு, இரத்தினபாலன் என்ற மதயானையை அவிழ்த்து விட்டு, அதனைக் கொண்டு தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தீர்மானித்தான். அதன் பாகனைக் கண்டு பெருநிதி கொடுத்துக் குறித்த நாள் ஒன்றில் அதைத் தெருக்களிலே சுற்றி வரும்படி அனுப்ப ஏற்பாடு செய்தான். அரசனும் அதற்கு ஆதரவு அளித்தான்.

அன்று புத்தர் பிரான் இராஜகிருகத்தில் ஒரு பெருந்தனிகரின் வீட்டில் ஐயம் ஏற்றுக்கொள்ள இசைந்திருந்தார். அவருடன் ஐந்நூறு பிக்குக்களும் வந்து கொண்டிருந்தனர். நகரில் மதயானை வெளிவரப் போகின்றது என்று எச்சரிக்கை மணி எங்கும் ஒலித்தது. உடனே புத்தருக்கு விருந்தளிக்க இசைந்த செல்வரும் பல மக்களும் ஓடிச் சென்று விஷயத்தைச் சொல்லி, ஐயனும் பிக்குக்களும் நகருக்குள் வர வேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர். ஆனால் பெருமான் அதற்குச் செவி சாய்க்கவில்லை. எதுவும் நிகழாதது போலே, அவர் வழக்கம்போல் நடந்து கொண்டே நகரை நண்ணினார்.

மதங்கொண்ட யானைக்கு வெறியளிப்பதற்காக மேற்கொண்டு மதுவும் கொடுக்கப்பட்டிருந்தது. குன்றம்