பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356 ⚫ போதி மாதவன்

பெருமானுக்குப் பல காணிக்கைகளைக் கொண்டு வந்து செலுத்தி வணங்கி நின்றனர்; உற்சாக மிகுதியால் தங்கள் நகைகளைக் கழற்றி ஐயனிடம் உபதேசம் பெற்ற யானைக்கும் அணிவித்தனர். அந்த யானையின் இயற் பெயர் 'மாலகிரி' என்றும், ஏராளமான இரத்தின ஆபரணங்களைப் பெற்றதால் இது ‘இரத்தினபாலன்’ அல்லது ‘தன பாலன்’ என்று பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. பௌத்த தருமத்தில் அதுவரை நிலைத்து நில்லாத பல மக்கள் அப்பொழுது முதல் அதிலே ஊக்கம் கொண்டனர். மன்னனும் இரத்தின பாலன் அடங்கி வணங்கிய செய்தி கேட்டு ஆச்சரியமடைந்தான். தேவதத்தன் மட்டும் தனது கடைசி முயற்சியும் தோல்வி யடைந்ததை எண்ணி மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்.

பிற்காலத்தில் புத்த சரித்திரத்தைச் சித்திரங்களாகத் தீட்டியுள்ள விகாரைகளிலும், ஆலயங்களிலும் மதயானை பெருமானைத் துரத்தி வருவதும், அவர் அதனை ஆட் கொள்வதும் அழகிய சித்திரங்களாக எழுதப்பெற்றிருக்கின்றன. அஜந்தா, அமராவதி போன்ற இடங்களிலும், வெளிநாடுகளிலுள்ள ஆலயங்களிலும் இந்தச் சித்திரங்களை இப்போதும் காணலாம்.

ஜீவகர்

பகவரிடம் அன்பு பூண்டு அவர் அருளைப்பெற்ற அடியார்களுள் அநாத பிண்டிகர், விசாகை முதலியவர் களோடு ஜீவகருடைய பெயரும் அடிக்கடி கூறப்படும். ஜீவகர் அக்காலத்திலே தலைசிறந்த மருத்துவராக விளங்கி வந்தவர். அவர் மகத மன்னர் பிம்பிசாரருக்கு அரண்மனை வைத்தியராக இருந்தார். பின்னால் அஜாதசத்துருவுக்கும் அவரே வைத்தியர்.

பிம்பிசாரருடைய மற்றொரு மைந்தனான அபயன் என்பவனுக்கும் புகழ்பெற்ற சாலாவதி என்ற தாசிக்கும்