பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 357

மைந்தராகப் பிறந்தவர் ஜீவகர் என்று கூறுவர். அவர் பிறந்த செய்தி எதுவும் இளவரசருக்குத் தெரியாது. குழந்தை பிறந்ததும், அதை ஒரு கூடையில் வைத்து அருகிலிருந்த ஒரு வனத்திலே கொண்டுபோய் வைத்து விட்டு வரும்படி சாலாவதி ஏற்பாடு செய்திருந்தாள். அவ்வனத்திலே வேட்டைக்குச் சென்ற அபயன் குழந்தையின் குரலைக் கேட்டு அதை அரண்மனைக்கு எடுத்துவந்து வளர்த்து, அதற்கு ஜீவகன் என்று நாமகரணம் செய்தான்.

ஜீவகர் சிறு வயதிலேயே மகா புத்திசாலியாக விளங்கினார். ஆனால் தமது தாய்தந்தையர் எவரென்று தெரியாததால் அவர் மிகவும் துயரமடைந்தார். அந் நிலையில் கல்வி கேள்விகளிலே பயிற்சிபெற்றுத் தாம் உயர்ந்த நிலையை அடையாவிட்டால், வாழ்க்கை பெருந்துன்பமாகவேயிருக்கும் என்று உணர்ந்து, அவர் தட்சசீலம் சென்று, அங்குள்ள கலாசாலையில் படித்து வந்தார். ஆரம்பத்திலிருந்தே மருத்துவத்திலே அவர் மனம் பற்றுக்கொண்டிருந்ததால், அதையே அவர் பயின்றார். சில ஆண்டுகளுக்குள்ளே அவர் அதில் தேர்ந்து விளங்கினார். கல்வி முடிந்தபின் ஆசிரியர் அவருக்கு வழிச்செலவுக்குப் பொருள் கொடுத்து, ஆசி கூறி, அனுப்பிவைத்தார்.

வருகின்ற வழியிலே சாகேத நகரில் ஒரு செல்வச் சீமாட்டிக்குப் பல ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த தலை வலியை ஜீவகர் நிவாரணம் செய்து, பெருஞ்செல்வமும் புகழும் பெற்றார். மிக்க சிறப்போடு அவர் இராஜகிருகத்தில் அபயனைச் சென்று கண்டார். இடையில் அபயன் ஜீவகர் தமது குமாரரே என்பதை விசாரித்து அறிந்து கொண்டிருந்ததால், அவர் வந்ததும், தானே அவர் தந்தை என்பதையும், சாலாவதி அவர் தாய் என்பதையும் தெரிவித்தார்.