பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358 ⚫ போதி மாதவன்

நாள்தோறும் ஜீவகரின் புகழ் அதிகரித்து வந்தது. மன்னர் பிம்பிசாரருக்கும் அவரே வைத்தியம் செய்து வந்தார். காசி, உஜ்ஜயினி முதலிய பெரு நகரங்களிலிருந்து செல்வர்கள் பலர் அவரைத் தேடிவரலாயினர். ஒரு சமயம் புத்தர் பெருமான் உடல் நோயுற்றிருக்கையில், ஆனந்தர் ஜீவகரை அழைத்துச் சென்றார். ஜீவகர் தாம் பிறவி யெடுத்த பெரும்பேறு கிடைத்துவிட்டது என்று அக மகிழ்ந்து, பெருமானுக்கு வைத்தியம் செய்தார். நோயின் காரணங்கள் மூன்று என்று கண்டு, அவர் மூன்று தாமரை மலர்களைப் பெருமானிடம் கொடுத்து, அவைகளை முகர்ந்து பார்த்தால் நோய் நீங்கும் என்றார். அம்மலர்களிலே உடலில் சேரவேண்டிய மருந்துப் பொடிகள் சேர்ந்திருந்தன. பெருமான் அவர் கூறியபடியே செய்ததில், பிணி உடனே குணமாகிவிட்டது. பின்னால் தேவதத்தன் வீசிய பாறையிலிருந்து தெறித்த கற்களால் அவருடைய பாதத்தில் ஏற்பட்ட புண்ணையும் ஜீவகரே குணப்படுத்திய செய்தி மேலே கூறப்பட்டுள்ளது. பெருமானுக்கு ஜீவகரிடத்தில் அளவற்ற பிரியமுண்டு. கல்வி, கேள்வி, ஒழுக்கம், தரும விருப்பம் முதலியவற்றிலே ஜீவகர் சிறந்து விளங்கியதால், அவர் எது சொன்னாலும் ஐயன் அதை அன்போடு கேட்டுக் கொள்வது வழக்கம். ஜீவகர் வேண்டுகோளுக்கு இணங்கியே பிணி வந்த காலத்தில் பிக்குக்கள் மருந்துகளை உபயோகித்துக் கொள்ளலாம் என்று அவர் அனுமதித்தார்.

ஒரு சமயம் உஜ்ஜயினி மன்னர் பிரத்தியோதர் தமக்கு ஏற்பட்டிருந்த காமாலையைக் குணப்படுத்தியதற்காக ஜீவகருக்கு மிக உயர்ந்த ஆடைகளைப் பரிசளித்தார். அவைகளைப் பார்த்ததும், ஜீவகர், ‘இவ்வளவு உயர்ந்த ஆடைகளைப் புத்த தேவருக்கே காணிக்கையாக அளிக்க வேண்டும்; இல்லாவிடில் மன்னர் பிம்பிசாரரே இவற்றிற்கு உரியவர்!’ என்று கருதினார். பிறகு அவ்வுடைகளைப் பெருமானிடமே கொண்டு சேர்த்து விட்டார்.