பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 361

அவர் அஞ்சினார். மேலும் பகவர் அவரவர் தகுதியை அறிந்தே உபதேசம் செய்ய இசைவர் என்பதையும், மன்னனுக்குத் தகுதியைப் பார்க்கினும் பாவமே அதிகமிருக்கும் என்பதையும் எண்ணி, அவர் ஏராளமான ஜனங்களுடன் செல்ல விரும்பினார். ஜனங்களிலே புண்ணியம் புரிந்தவர்கள் இருப்பார்கள் என்றும், அவர்களுக்காக ஐயன் அறவுரை கூறுவார் என்றும் அவர் கருதிருயிந்தார்.

கடைசியாக மன்னன் மருத்துவரின் யோசனைப்படியே புத்த தேவரைத் தரிசிக்கப் புறப்பட்டான். ஆண்களின் உடையுடன் ஆயுதந் தாங்கிய ஏராளமான பெண்களுடனும், பரிவாரங்களுடனும், பொதுமக்களுடனும், அவனும் ஜீவகரும் ஒரு யானை மீது அமர்ந்து கழுகுமலை மேல் அமைந்திருந்த விகாரையை நோக்கிச் சென்றனர். வானத்தில் பூர்ணச்சந்திரன் தன்ணொளி பரப்பிக் கொண்டிருந்தான். வழியெங்கும் மன்னன் மன அமைதி யில்லாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தான்.

விகாரையை அடைந்ததும், யானையை ஒருபுறமாக விட்டுவிட்டு, மன்னனும் ஜீவகரும் மற்ற மக்களுடன் புத்த தரிசனத்திற்காகச் சென்றனர். அப்போது பால்போன்ற நிலவில், ஆயிரத்து இருநூற்றைம்பது சீடர்களின் நடுவிலே, போதிமாதவர் அமர்ந்திருந்தார். மன்னன் அந்தக் கூட்டத்திலே எவர் புத்தர் என்று ஜீவகரிடம் கேட்டான். பிக்குக்களின் நடுவே ஒப்பற்ற எழிலுடன் நடுநாயகமாக விளங்குபவரே அருள் வள்ளலாயிருக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். எனினும் அரசர்க்குரிய முறைப்படி தனக்குத் தெரியாததுபோல் கேட்டுக் கொண்டான். அவனுடைய கேள்வி, ‘பூமி எது?’ என்பது போலவும், ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே, சூரியன் எது? சந்திரன் எது?’ என்று கேட்பது போலவும், ஜீவகருக்குத் தோன்றிற்று. செந்தாமரை போன்ற

போ–23