பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362 ⚫ போதி மாதவன்

மலர்ந்த முகமும், அண்டினோர் அனைவருக்கும் அபயமளிக்கும் அருட்கரமும் கொண்டு விளங்கிய பெருமானை அவர் சுட்டிக்காட்டி, ‘அவரே போதிமாதவர்!’ என்றார்.

அஜாதசத்துரு, தனது மேலங்கியைக் கழற்றி ஒரு தோளில் போட்டுக் கொண்டு, பகவரிடம் சென்று முழங்கால் படியிட்டுத் தரையைத் தொட்டு வணங்கினான். பின்னர் கைகளைக் கட்டிக் கொண்டு ஒருபுறமாக ஒதுங்கி நின்று, ‘பகவ! இங்கே பிக்குக்கள் அனைவரும் மன அடக்கத்துடன் சாந்தியோடு திகழ்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இத்தகைய சாந்தி என் இளவரசன் உதாயிபத்ரனுக்கும் கிடைத்தால் பாக்கியந்தான்!’ என்று கூறினான்.

‘நன்று. நன்று, மகாராஜா! இளவரசனிடம் நீங்கள் அளவற்ற அன்பு கொண்டிருக்கிறீர்கள்! உட்காருங்கள்!’ என்று பெருமான் கூறினார்.

மன்னர் அவர் பாதங்களை மறுபடி வணங்கி, ஒரு பக்கத்தில் அமர்ந்துகொண்டு, ‘பகவர் அனுமதித்தால் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்’ என்று வேண்டினான்.

எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்று பகவர் சொன்னார்.

அஜாதசத்துரு, ‘உலகத்திலே மக்கள் பல தொழில்களைச் செய்து அவற்றால் பயனடைவதுபோல், தருமத்தை மேற்கொண்டு, ஒழுக்கமும் பேணுவதால் வெளிப்படையாகத் தெரியக்கூடிய பயன் ஏதும் உண்டாகிறதா?’ என்று கேட்டான்.

அந்தக் கேள்வியை வேறு யாரிடமாவது அவன் கேட்டதுண்டா என்று பகவர் வினவினார். அதற்கு அவன், ‘ஆம்’ என்று சொல்லி, பூர்ண காசியபர், கோசாலி, சஞ்சயர், அஜித கேசகம்பளர்,