பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 365

பதை அறிந்திருந்த அமைச்சர்களும். பிரபுக்களும், புத்தர் பெருமானின் ஏற்றத்தை எடுத்துக் காட்டி, மேற்கொண்டு தேவதத்தனுக்கும் அவனுடைய துறவிகளுக்கும் அரசன் எவ்வித உதவியும் செய்யவேண்டியதில்லை என்று ஆலோசனை கூறினார். அவ்வாறே உதவிகளை நிறுத்திவிடும்படி அரசனும் கட்டளையிட்டான். அரண்மனையிலிருந்து வண்டி வண்டியாக உணவுப் பொருள்கள் வருவது நின்று போகவே தேவதத்தனுடைய துறவிகள் அவனைக் கை விட்டனர். வறுமையாலும், மனவேதனையாலும் அவன் மிகவும் அவதிப்பட்டான். எனினும் மீண்டும் ஒருமுறை புத்தரைச் சந்தித்துத் தன் காரியம் கைகூடுமா என்று பார்க்க அவன் விரும்பினான்.

ஒருநாள் அவன் புத்தரிடம் சென்று, அவரை வணங்கி, ஐந்து வேண்டுகோள்களுடன் தான் வந்திருப்பதாகக் கூறினான். பெருமானும் அவற்றைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவன் வேண்டுகோள்கள் வருமாறு: பிக்குக்கள் மேற்கொண்டு நகரங்கள் கிராமங்களுக்கு அருகிலுள்ள விகாரைகளில் தங்காமல் காடுகளிலேயே இருக்கவேண்டும்; அவர்கள் ஐயமெடுக்கும் உணவைத் தவிர மக்கள் விகாரைகளில் கொண்டுவந்து அளிக்கும் உணவுகளைத் தீண்டக்கூடாது; இடுகாடுகளில் பிணங்களின் மீதுள்ள துணிகளைத் தவிர வேறு உடைகளைப் பிக்குக்கள் அணியக்கூடாது; அவர்கள் மரங்களின் அடியில் தங்கலாமேயன்றிக் கூரையுள்ள வீடுகளுக்குள் புகவே கூடாது; எந்தப் பிக்குவும் எத்தகைய புலாலையும் உண்ணக்கூடாது; இந்த ஐந்து விதிகளையும் புத்தர் உடனே அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.

இவைகளில் ஒவ்வொன்றையும் மறுத்துப் போதி வேந்தர் பதிலளித்தார். உடலை மிகவும் வருத்தக்கூடிய தவத்தையும், உலக போகங்களில் ஆழ்ந்திருப்பதையும் மறுத்து, நடுவழியான தருமத்தை அவர் உபதேசித்து வந்ததால், மிகவும் கடுமையான விதிகளை விதிக்க