பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366 ⚫ போதி மாதவன்

விரும்பவில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த விதிகளைக் கூட அவர் பின்னால் தளர்த்திவிட்டார். தேவதத்தனுடைய நோக்கம் சங்கத்தில் பிக்குக்களே இல்லாமற் செய்து விட வேண்டும் என்பது. அதை அறிந்த புத்தர் பெருமான், வயோதிகர்களும், குழந்தைகளும், பெண்களும்கூடச் சங்கத்திலிருப்பதால், எல்லோரும் வனங்களிலேயே இருக்க வேண்டும் என்று கூறுவது தவறு என்றும், ஊர்களுக்கு அருகே இருந்தால்தான் பிக்குக்கள் அடிக்கடி மக்களுக்கு உபதேசிக்க முடியும் என்றும், விருப்பமுள்ளவர்கள் மட்டும் வனங்களில் வசிக்கலாம் என்றும் கூறினார். இவ்வாறே மற்ற வேண்டுகோள்களையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் புலால் உணவு பற்றி அவர் கூறுகையில், உணவுக்காக உயிர்க்கொலை புரிதல் கூடாது என்றும், ஆனால் மக்கள் அளிக்கும் புலால் உணவுகளைப் பிக்குக்கள் ஏற்றுக்கொள்வதைத் தாம் தடுக்க இயலாது என்றும், பிக்குக்கள் அவர்கள் இருக்கும் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களின்படி நடந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும், எந்த உணவானாலும் நாவுக்கு அடிமைப்பட்டிருக்கக் கூடாது என்பதே முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

தேவதத்தன் தன் முயற்சியில் தோல்வியுற்றுத் திரும்பி விட்டான். பின்னர், தன்னை விட்டுச் சென்ற துறவிகளைச் சமாதானப்படுத்தி மீண்டும் தன் விகாரைக்கு அழைத்து வந்தான். அந்தத் துறவிகளின் வாழ்க்கை வீணாகாமல் அவர்களை உய்விக்கக் கருதிப் புத்தர் பிரான் சாரீபுத்திரரையும், மௌத்கல்யாயனரையும் அவர்களிடம் அனுப்பிவைத்தார்.

அவர்கள் தேவதத்தனுடைய விகாரைக்குச் சென்ற சமயத்தில், அவன் புத்தரைப் போலப் பாவனை செய்து அமர்ந்துகொண்டு, சீடர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தான். அவன் அவர்களைப் பார்த்ததும், அவர்களும் தன் கட்சிக்கு வந்துவிட்டதாக எண்ணி, மகிழ்ச்சியுடன்