பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம் ⚫ 35

யிற்று. பண்டைப் பழங்காலத்திலிருந்தே ஒவ்வோர் ஆண்டிலும் விளை நிலங்களில் முதன் முதல் ஏர்கள் பூட்டி உழுவதை விவசாயிகள் பெருந் திருவிழாவாகக் கொண்டாடுதல் இந்தியா, சீனம் முதலிய நாடுகளிலெல்லாம் வழக்கமாயிருந்து வருகிறது. இவ்விழாவிலே பெருஞ் செல்வம் படைத்த பிரபுக்களும், அரசர்களும் கலந்து கொள்வதும் வழக்கம்.

கபிலவாஸ்துவில் நடைபெற்ற விழாவுக்கு அரசர் குழந்தை சித்தார்த்தனையும் தம்முடன் அழைத்துச் சென்றிருந்தார். வயல்களின் அருகே குழந்தையை ஓர் அழகிய கட்டிலில் படுக்கவைத்து, உயரே பலவர்ணப் பட்டுத்துணிகளால் குடைகள் அமைத்து, நாற்புறத்திலும் திரைகளிட்டு, நூறு தாதிகள் அங்கு நின்று இளவரசைக் கவனித்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசர் அன்று அலங்காரமான உடைகள் அணிந் திருந்தார். ஆயிரம் பிரபுக்கள் அவரைச் சூழ்ந்து நின்றனர். ஒரே சமயத்தில் உழுவதற்கு ஆயிரம் கலப்பைகள் தயாராக வைக்கப் பெற்றிருந்தன. அவைகளில் நூற்றெட்டுச் கலப்பைகள் வெள்ளியிற் செய்தவை ; அரசர்க்கு உரியது மட்டும் தங்கத்திற் செய்தது. அந்த உயர்ந்த ஏர்களை இழுக்கும் எருதுகளும் அலங்கரிக்கப் பெற்றிருந்தன. ஏராளமான பொதுமக்களும் அந்தக் கோலாகலத்தைக் கண்டு களிப்பதற்காகக் குழுமி நின்றனர்.

முதலில் மன்னர் தனது பொன் ஏரைப் பிடித்துக் கிழக்கிலிருந்து மேற்கு முகமாக ஒரு முறை உழுதார். உடனே நூற்றெட்டுப் பிரபுக்கள் வெள்ளி ஏர்களால் மூன்று முறை உழுதனர். உழவர்கள் யாவரும் மற்ற ஏர்கள் அனைத்தையும் பற்றி உழ ஆரம்பித்தனர். பெரிய ஆரவாரத்திடையே, மன்னர் தலைமையில் ஆயிரம் ஏர்கள் ஏக காலத்தில் உழுதமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததால், தூரத்தில் இருந்தவர்களும் அந்த நேரத்தில்