பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370 ⚫ போதி மாதவன்

யிருக்கையில் சிற்றன்னை கௌதமியார் அங்கே சென்று அவரைத் தரிசித்துவிட்டுத் தமது விகாரைக்குத் திரும்பிச் சென்றார். அப்போது அவர் உள்ளத்தில் தாம் விரைவிலே நிருவாணமடைய வேண்டும் என்ற எண்ணம் சுடர்விட்டு ஒளிர ஆரம்பித்தது.

பெருமானுடைய திருமேனி திடமாயிருக்கும்போதே தாம் முன்னதாக முக்திபெற வேண்டும் என்று அவர் கருதினார். மேலும் புத்தருடைய சீடர்களில் கௌண்டின்யர், சாரீபுத்திரா, மௌத்கல்யாயனர் முதலியோர் விரைவிலே நிருவாணமடையும் நிலையிலிருந்ததை அவர் தமது ஞான திருஷ்டியால் உணர்ந்திருந்தார். எனவே எல்லோருக்கும் முன்னதாகத் தாமே நிருவாணப் பேற்றைப் பெற வேண்டும் என்று ஆவல் கொண்டு, அவர் பெருமானை அணுகித் தமது விருப்பத்தை வெளியிட்டார். ஐயனும் மன உருக்கத்தோடு அதற்கு இசைந்தார் அப்போது அனனையார்க்கு வயது நூற்றிருபது என்று இலங்கை வரலாறுகளில் காணப்படுகின்றது. அந்த முதுமைப் பருவத்திலும் அவர் நரை, திரை முதலியவையின்றி இளமையோடு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

பெண்டிரும் நிருவாணப் பேற்றை எளிதில் அடைய முடியும் என்பதை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டுப் போதி மாதவர் தம் அன்னையார் பெற்றிருந்த இருத்தி ஆற்றல்களைக் காட்டும்படி வேண்ட, அவரும் அவ்வாறே ஆகாயத்திற் பறந்து, பல உருவங்களெடுத்துப் பின்பு ஒரே உருவாகிப் புத்தர் புகழை ஓதிக் கொண்டே நிருவாண நிலையை அடைந்தார். அவரைப் போலவே அவருடன் தவப்பள்ளியில் தங்கியிருந்த 500 பிக்குணிகளும் நிருவாணமடைந்தனராம்.

மனைவியார்

யசோதரா தேவியார் தமது எழுபத்தெட்டாம் வயதில் நிருவாண நிலையை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.