பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 371

புத்தர் அவதரித்த நன்னாளிலேயே அவரும் தோன்றியவராதலால், இருவரும் ஒரே வயதினர். பெருமான் ஈராண்டுகளில் மகா-பரி-நிருவாணம் எய்துவார் என்பதைத் தேவியார் அறிந்திருந்ததால், அவருக்கு முன்னதாகத் தாம் நிருவாணமடைதலே முறையென்று கருதினார். போதி வேந்தரும், ‘சீலம் நிறைந்த பெண்களில் நீயே முதன்மை யானவள்!’ என்று அவரைப் போற்றி அனுமதி அளித்தார். பெருமானும், பிக்குக்களும், ஏராளமான , பொது மக்களும் சூழ்ந்திருக்கையில், தேவியார் வானத்தில் எழுந்து தமது இருத்தி ஆற்றலால் சில அற்புதங்கள் செய்து காட்டி விட்டுத் தமது தவப்பள்ளிக்குத் திரும்பிச் சென்று, தியானத்தில் அமர்ந்து, அன்றிரவே சாந்தி நிலையமாகிய நிருவாண நிலையை அடைந்தார்.

யாத்திரா மார்க்கம்

போதி நாதரின் கடைசியான புனித யாத்திரை இராஜ கிருக நகருக்கு அருகேயிருந்த கிருத்திரகூடம் என்ற கழுகுக் குன்றிலிருந்து ஆரம்பமாயிற்று. தலைநகரிலும், அருகாமையிலும் தங்கியிருந்த பிக்குக்களும், சீடர்களும் ஐயனின் அறவுரை கேட்க விகாரையில் வந்து குழுமியிருந்தனர். பௌத்த சங்கம் நாள்தோறும் வளர்ச்சி பெற்று நிலை நிற்பதற்குரிய முறைகளையெல்லாம் பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். பிக்குக்கள் ஒற்றுமையோடு அடிக்கடி சங்கத்திற் கூட வேண்டும் என்றும், வயது முதிர்ந்த தேரர்களுடைய வாய்மொழிகளை மற்றவர்கள் மதித்து நடக்கவேண்டும் என்றும் அவர் உபதேசித்தார். ஏகாந்த வாசம், வீண்பேச்சை விலக்கல், மடிமைக்கு இடங் கொடாமை, ஊதியம் தரும் தொழில்களில் ஈடுபடாமை தீய ஆசைகளை அகற்றல், தீவினைகளுக்கு, அஞ்சுதல், நிரம்பிய கல்வி, நிறைந்த நம்பிக்கை, தெளிந்த ஞானம், உலைவில்லாத ஊக்கம், சத்திய நாட்டம், நிலையாமையை உணர்தல், உள்ளப் பரிசுத்தம், அமைதி, ஆனந்தம்,