பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ⚫ போதி மாதவன்

கூட்டத்தோடு புலங்களின் அருகே வந்து கலந்து நின்றனர். சித்தார்த்தனைக் கவனித்துக் கொண்டிருந்த தாதியர் அனைவரும் அக்காட்சியைக் காணச் சென்று, அங்கேயே மெய்ம்மறந்து நின்று கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின்பு அவர்கள் திரும்பிச் சென்று பார்க்கையில், சித்தார்த்தன் கட்டிலின அருகே, தரைக்குச் சற்று மேலே, காற்றில் அமர்ந்து கொண்டிருந்தான். தரையிலே யாதொரு பற்றுமின்றி அவன் அந்தரத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்கள் பேராச்சரியம் அடைந்து, மன்னரிடம் ஓடிச்சென்றனர். ‘இங்கே ஏர் உழும் காட்சி இருக்கட்டும்; அங்கே இளவரசர் காட்சியின் விந்தையை வந்து பாருங்கள்!’ என்று கூவி அழைத்தனர்.

மன்னரும் விரைந்து சென்று பார்த்தார். குழந்தையின் பேராற்றலைக் கண்டு பிரமித்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, அவர் அதன் பாதங்களைப் பற்றிக்கொண்டு வணங்கினார். அப்போது காலைச் சூரியன் கீழ்த்திசை யிலில்லாமல், வானத்து உச்சியில் விளங்கிக் கொண்டிருந்தான். சித்தார்த்தன் மீது வெய்யில் படாமல் இருப்பதற்காகக் குழந்தை அமர்ந்திருந்த மரத்திற்கு நேர் உயரே சூரியன் நிலைத்து நின்றான். சுத்தோதனர் தம் செல்வனைப் பார்த்து, ‘ஐய! உன் ஆற்றலையெல்லாம் என்னிடம் ஏன் காட்டுகிறாய்? இதையெல்லாம் பார்த்து ஆனந்திக்கவேண்டியவள் உன் அருமைத் தாய்! அவள் இப்போது இல்லையே!’ என்று கூறி வருந்தினார்.

இவ்வாறு சித்தார்த்தனின் இளமைப் பருவத்தைப் பற்றி எத்தனையோ கதைகள் இருக்கின்றன. ஆயினும், ஆதாரமுள்ள சரித்திரக் குறிப்புக்கள் இல்லை; பெரும்பாலும் நாமாகக் கற்பனை செய்தே கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. நாட்டின் செழிப்பும், அரண்மனை, ஆறு, விளை நிலங்கள், நந்தவனங்கள் யாவும் இளமையிலேயே அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்கலாம். அரசரின்