பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378 ⚫ போதி மாதவன்

யோடு வந்துகொண்டிருந்தாள். ‘உலகிலே இது அபூர்வம். பொதுவாகப் பெண்கள் அறிவில் குறைந்தவர்களாயும், ஆடம்பரத்தில் ஆழ்ந்தும் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இவளோ, செல்வம் கொழிக்கும் நிலையில் வாழ்ந்திருந்தும் ஒரு மேதாவியைப் போன்ற ஞானம் பெற்று, தவத்தில் இன்பம் கண்டு களிப்படைந்து, சத்திய உபதேசத்தை அப்படியே முழுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்க நற் பாத்திரமாக விளங்குகிறாள்!’ என்று பெருமான் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அம்பபாலி அருகே வந்து போதிமாதவரின் பொன்னடிகளை வணங்கி, அவர் குறித்துக் காட்டிய இடத்தில் அமைதியோடு அமர்ந்தாள். அழகும், அறிவும், குண சௌந்தரியமும் பெற்றிருந்த அவளைப் போன்ற ஒரு பெண் தரும உபதேசம் பெற வந்திருப்பது அரியதொரு நிகழ்ச்சி என்று அவர் பாராட்டி, மேலும் சிலவார்த்தைகள் கூறினார்:

‘இவ்வுலகில் தோன்றிய ஒரு மனிதன் முறையான சிந்தனையினால் நன்மையிலே திளைத்திருக்க ஆரம்பிக்கிறான். செல்வமும் அழகும் நிலையாமையை அவன் கண்டு கொள்கிறான். தருமமே அவனுக்கு நிகரற்ற அணியாக விளங்குகின்றது.

‘ஆசையைத் தூண்டக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் அவன் எப்போதும் ஒதுக்கித் தள்ளி விட்டு, அவாவின்மையால் ஏற்படும் வலிமையைப் பெறுகிறான்.

‘வெளி உதவியைச் சார்ந்து நின்றால், அவன் துக்கமே பெறுகிறான்; தன்னம்பிக்கை கொண்டவுடன், அவனுக்கு வலிமையும் இன்பமும் கிடைக்கின்றன...’[1]


  1. ‘ஃபோ- ஷோ - ஹிங்- த்ஸாங்- கிங்.’