பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 381

உயரிய இலட்சியத்தையும் மறைத்துவிடுகின்றது;சாம்பரை மிதித்த பாதத்தை உள்ளேயுள்ள நெருப்பு சுட்டுவிடுகின்றது.

நல்லொழுக்கத்தையும் புண்ணியத்தையும் இழந்தால், நாம் வருந்த நேருகின்றது; அவ்வாறு இழப்பதற்கு முழுவதும் காரணமாயுள்ளது “நான்” என்ற அகந்தையே. (வாழ்வில்) வெற்றியடைந்தவர்களிடையே நான் சினேந்திரனாயுள்ளேன்; எனவே, தன்னைத்தான் அடக்கி வெற்றி கொள்ளும் ஒவ்வொருவனும் என்னோடு சேர்ந்தவனாவன்.

அவா என்பதே துக்கத்திற்கு முதன்மையான காரணம்; அது நமது நண்பனைப்போல இருந்து, அந்தரங்கத்தில் நம்மை உறவாடிக் கெடுக்கும் பகையேயாகும்.

‘ஆகவே, முதலாவது நமக்குத் தேவையானது “ஸம்மா திருஷ்டி” (என்ற நற்காட்சி) ஐயம், திரிபுகளுள்ள கொள்கைகளை நீக்கி, உண்மையைக் கண்டு கொள்ள அதுவே உதவியாகும். அதன் பின்பு அவாவின் பிடியிலிருந்து விடுதலை பெறுதல் எளிது........’

அமலர் அருளிய அரிய வாசகங்களால் லிச்சவிகளின் உள்ளங்களில் எழுச்சியும் மகிழ்ச்சியும் தோன்றின. அவர் கள் எழுந்து நின்று வணங்கி, மறுநாள் பெருமானும் பிக்குக்களும் தங்கள் இடத்திற்கு வந்து விருந்துண்ண வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

‘லிச்சவிகளே! கணிகை அம்பபாலியுடன் நாளை விருந்துண்ண வாக்களித்துள்ளேன்!’ என்று பெருமான் கூறிய தும், அவர்கள் ஒரு வேசிப் பெண் தங்களை எளிதில் வென்று விட்டதை எண்ணி வருந்தினார்கள். பிறகு விடை பெற்றுக்கொண்டு, அவர்கள் தத்தம் இடத்திற்குச் சென்றார்கள்.

மறுநாள் காலையில் அம்பபாலி தனது மாளிகையில் மாதவர்க்கு ஏற்ற நல் விருந்து தயாரித்து, ஐயனையும்