பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 385

‘சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். சத்தியத்தையே அடைக்கலமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். உங்களைத் தவிர வேறு சரணடைய வேண்டிய எவரையும் நாட வேண்டாம்!

‘ஆனந்தா! ஒரு பிக்கு தாமே தமக்குத் தீபமாயும், தாமே தமக்கு அடைக்கலமாயும், வெளியே அடைக்கலம் தேடாமல், சத்தியத்தையே தீபமாகப் பற்றிக் கொண்டும் தம்மைத் தவிர வேறு எவரையும் அடைக்கலமாகக் கொள்ளாமல் இருப்பது எப்படி?

‘ஆனந்தா! ஒரு பிக்கு உடலோடு வாழும் காலத்தில் இடைவிடாத முயற்சியுடனும், கருத்துடனும், உறுதியுடனும், தாம் உலகில் இருக்கும் போதே, உடலின் ஆசைகளிலிருந்து தோன்றும் துக்கத்தை வெல்லத்தக்க முறையில் உடலைப் பற்றிப் பாவனை செய்துகொள்ள வேண்டும்.

‘அவ்வாறே அவர் சிந்தனை செய்யும்போது, அல்லது ஆராயும்போது, அல்லது உணரும் போது, இடைவிடாத முயற்சியுடனும், கருத்துடனும், உறுதியுடனும், தாம் உலகில் இருக்கும் போதே, சிந்தனைகள், ஆராய்ச்சி, அல்லது உணர்வு காரணமான அவாவிலிருந்து தோன்றும் துக்கத்தை வெல்லத்தக்க முறையில் சிந்தனைகளைப் பற்றிப் பாவனை செய்து கொள்ள வேண்டும்.

‘ஆனந்தா! என் பிக்குக்களிடையே இப்பொழுதோ, அல்லது நான் மரித்த பிறகோ, எவர்கள் தமக்குத் தாமே தீபமாயும், வெளியே