பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386 ⚫ போதி மாதவன்

எவ்வித உதவியும் தேடாமல், தமக்குத் தாமே அடைக்கலமாயும், சத்தியத்தையே தீபமாகப் பற்றிக்கொண்டும், சத்தியத்தையே தமது அடைக்கலமாகப் பற்றிக்கொண்டும், தம்மைத் தவிர வெளியே எவரிடமும் அடைக்கலத்தை நாடாமலும் இருக்கின்றார்களே, அவர்களே (இலட்சிய) சிகரத்தை அடைவார்கள். ஆனால் அவர்கள் கற்க வேண்டியதில் ஆர்வத்தோடு இருக்க வேண்டும்!”

வைசாலி

மறுநாள் அதிகாலையில் புத்த தேவர் மடியான சீவர உடையணிந்து, திருவோடேந்திக் கொண்டு, ஐயம் ஏற்பதற்தாக வைசாலி நகருக்குச் சென்று திரும்பினார். அன்று உணவருந்திய பின்னர் அவர் ஆனந்தரை அழைத்து, ‘ஆனந்தா, பாயை எடுத்துக்கொள்! இன்றைப் பொழுதை, நான் சாபால சேதியத்தில் கழிக்க விரும்புகிறேன்’ என்று சொன்னார். ஆனந்தர் அவ்வண்ணமே பாயை எடுத்துக் கொண்டு, ஐயனுக்குப் பின்னால் அடி மேல் அடிவைத்துத் தொடர்ந்து சென்றார்.

சாபால சேதியத்தில் பெருமான் பாயின்மீது வீற்றிருக்கையில், ஆனந்தரும் அருகே அமர்ந்திருந்தார். அப்பொழுது ‘வைசாலி எவ்வளவு அழகான இடம், ஆனந்தா! உதான சேதியம், கோதம சேதியம், சத்தம்பக சேதியம், பகுபுத்த சேதியம், சாரந்தக சேதியம், சாபால சேதியம் எல்லாம் எவ்வளவு இன்பமானவை! என்று, இயற்கை யழகும் செயற்கையழகும் சிறந்து விளங்கிய விரிஜி நாட்டின் தலை நகரைப் பகவர் பாராட்டிப் பேசினார்.

பின்னர் அருகத்து நிலையை அடையவேண்டும் என்ற இலட்சியத்தை மேற்கொண்ட ஒருவர் அதற்குரிய