பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம் ⚫ 37

வீரச் செயல்கள், பராக்கிரமம் மிக்க சாக்கியர்களின் சாகஸங்கள், பாரத நாட்டின் பண்டைய மகரிஷிகளின் மாண்புகள், வீரர்களின் சரிதைகள் ஆகியவைபற்றி அவன் ஏராளமான கதைகளையும் பாடல்களையும் கேட்டு இன்புற்றிருக்கக் கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக, வானுற ஓங்கி வனப்புடன் திகழ்ந்த வெள்ளிப் பனிவரையாகிய இமயமலையின் தொடர்களையும் சிகரங்களையும் தூரத்திலிருந்தே பார்த்துப் பார்த்து, அவன் மனச் சாந்தியும் மகிழ்ச்சியும் பெற்றிருக்கக் கூடும். குழந்தைப் பருவத்திலிருந்தே சித்தார்த்தனுடைய வாழ்க்கைக்கு ஒழுக்கமே அடிப்படையாக அமைந்து விளங்கியிருக்க வேண்டும். அளவற்ற அன்பினால் அன்னை கௌதமி குழந்தையைக் கெடுத்து விடாத முறையில் சீலம் நிறைந்த சுத்தோதனர் கண்காணித்தும் வந்திருப்பார்.

கல்விப் பயிற்சி

குழந்தை சிறுவனாகி, வயதும் எட்டாயிற்று. சித்தார்த்தன் பள்ளிக்குச் செல்லவேண்டிய பருவம் வந்தது. அரச குலத்துச் சிறுவர்களுக்குக் கல்வி போதித்து வந்த விசுவாமித்திரரிடமே அவனையும் மன்னர் ஒப்படைத்தார். எழுதுவதற்காக நாற்புறமும் மாணிக்கக் கற்கள் பதித்த சட்டத்துடன் விளங்கிய சந்தனப் பலகையுடன் சித்தார்த்தன் ஆசிரியரிடம் சென்றான். விசுவாமித் திரரைக் கண்டதும், ‘ஆசாரிய! அறுபத்து நான்கு வகை மொழிகளில் எனக்கு இப்போது தாங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் மொழி எது?’ என்று கேட்டான். கேட்ட துடன் நில்லாது, திராவிட மொழி உள்ளிட்ட அறுபத்து நான்கு மொழிகளையும் வரிசையாகக் கூறி, ‘இவைகளில் நான் முதலில் கற்கவேண்டியது எதுவோ?’ என்று வினவினான்.