பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 393

வகை வாய்மைகளை விளக்கிக் கூறினார். பின்னர் அங்கிருந்து ஹத்திகாமா, அம்பகாமா, ஜம்புகாமா ஆகிய ஊர்களில் சிலநாள் தங்கியிருந்துவிட்டு, அவர்கள் போக நகரத்தை அடைந்தனர். எல்லா ஊர்களிலும் வழக்கம் போல் பிக்குக்களுக்கு ஐயன் உபதேசம் செய்தார். போக நகரில் ஆனந்த சேதியத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில் பிக்குக்களில் எவர் எது சொன்னாலும், அது ததாகதருடைய வாய் மொழிதானா என்பதையும் அவருடைய முந்திய நியமங்களுக்கும் சூத்திரங்களுக்கும் அது பொருத்தமாயுளதா என்பதையும் ஆராய்ந்து பார்த்தே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். தமக்குப் பின்னால் அடியார் அனைவரும் தருமத்தையே துணையாகக் கொள்ளவேண்டும் என்றும் விநய விதிகளுக்கு முரண்பாடானவைகளை விலக்கி ஒதுக்குதல் வேண்டும் என்றும் அவர் வற்புறுத்திச் சொன்னார்.

சந்தனின் விருந்து

அந்த யாத்திரையிலே அடுத்தாற்போல் பகவர் தங்கிய இடம் பாவா நகரில் ஒரு மாஞ்சோலை. அது சந்தன் என்னும் சீடனால் சங்கத்திற்கு அளிக்கப்பெற்ற தோட்டம். சந்தன் ஒரு பொற்கொல்லன்; பெருமானிடம் பேரன்பு கொண்டவன். ஐயன் எழுந்தருளிய செய்தியைக் கேட்டதும், அவன் ஆர்வத்தோடு சென்று அவரை வணங்கி உபதேசம் பெற்றான். முடிவில் மறு நாள் தேவர் அடியார் திருக்குழாத்துடன் தனது இல்லத்தில் பிச்சை யேற்றருள வேண்டும் என்று அவன் வேண்டினான். பெருமானும் மௌனமாக அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். வந்தது போலவே வணக்கம் செய்துவிட்டுச் சந்தன் விடை பெற்றுச் சென்றான்.

மறுநாள் பகலில் சந்தன் சர்க்கரைப் பொங்கல், பண்டங்கள், பணிகாரங்கள் முதலியவற்றோடு, உலர்த்தி

போ–25