பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396 ⚫ போதி மாதவன்

அவரை வணங்கினார். புக்குசா ஆலார காலாமரின் சீடர். உடல் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையிலும் பெருமான் அவருக்குத் தரும உபதேசம் செய்து களிப்பித்தார். புக்குசா காவி நிறத்தில் இரண்டு பொன்னாடைகளை வரவழைத்து அந்த இடத்திலேயே அளித்து, ஐயன் அவைகளை அங்கீகரிக்கும்படி வேண்டினார். ததாகதர் ஒன்றைத் தமக்கு அணிவிக்கும்படியும், மற்றதை ஆனந்தருக்கு அளிக்கும்படியும் கூறினார்

பொன்னாடை போர்த்திய புத்த தேவரின் திருமேனி திடீரென்று பேரொளியோடு விளங்கிற்று. ஆடையின் பிரகாசம் அவருடைய ஜோதியில் அடங்கிவிட்டது. ஆனந்தர் அதற்குக் காரணம் கேட்கையில், ததாகதர் மகாபோதி யடையும்போது தேகவியோகமாகும் போதும் அவரது உடல் ஜோதிமயமாக விளங்குவது இயற்கை என்று பெருமான் கூறினார்

அன்றிரவு நடுயாமத்தில் குசீநகரிலுள்ள மல்லர்களுடைய சாலமரச் சோலையிலே ததாகதர் தேகவியோக மாவார் என்பதையும் அவர் ஆனந்தருக்கு அறிவித்தார்.

பின்னர் ஐயனும் ஆனந்தரும் குகுஷ்டை நதிக்குச் சென்றனர். பெருமான் நீருள் இறங்கிக் குளித்துவிட்டுத் தாகத்திற்கும் அத்தெளிந்த நீரைப் பருகினர். அங்கிருந்து அடியார்கள் புடைசூழ, இரணயவதி நதிக்கரையில் அமைந்திருந்த குசீநகரை நோக்கி அவர் மெல்ல மெல்ல நடந்து சென்றார்.

சாரீபுத்திரர் நிருவாணமடைதல்

பகவருடைய மகா-பரி- நிருவாணத்தைக் கூறு முன்பு, அவருடைய திருக்கரங்களாக விளங்கித் தருமம் வளர்த்து வந்த சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவரும் முக்தி யடைந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்.