பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 397

பெருமான் கடைசி முறையாக வைசாலியில் எழுந்தருளியிருக்கையில் சிராவஸ்தியில் தங்கியிருந்த சாரீ புத்திரர் தமது இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என்பதையும், ஏழு நாட்களே எஞ்சி யிருந்தன என்பதையும் உணர்ந்து, தமது சொந்த ஊராகிய நாலந்தாவுக்குச் செல்ல வேண்டுமென்று அண்ணலிடம் வந்து விடை பெற்றுக் கொண்டார். அவர் கடைசி முறையாகப் பிக்குக்களுக்குப் போதனை செய்ய வேண்டுமென்று அண்ணல் வேண்டிக்கொள்ளவும், அவரும் அவ்வாறே செய்து விட்டு, ஐயனின் உதவியால் தாம்பெற்ற இருத்தி ஆற்றல்களையும் ஓரளவு வெளிப்படுத்திக் காட்டினார்.

தரும சேநாபதியின் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என்பதைக்கேள்விப்பட்ட மக்கள், ஏராளமான வாசனைத் திரவியங்களும், மலர் மாலைகளும் எடுத்துக்கொண்டு, அவரைத் தொடர்ந்து நாலந்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். வழியில் அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறி, அவர்கள் நகருக்குத் திரும்பிச் செல்லுமாறு செய்தார். அவருடைய மெய்யடியார்களான ஐந்நூறு பிக்குக்கள் மட்டும் அவருடன் சென்றனர்.

நாலந்தாவில், தம்முடைய பழைய வீட்டில், தாம் பிறந்த அறையிலேயே பூதவுடலை நீத்து நிருவாணப்பேறு பெறவேண்டும் என்பது சாரீபுத்திரரின் எண்ணம். மேலும் நாட்டார் பலருக்கும் நல்லுபதேசம் செய்து வந்த அப்பெரியார், தம்மைப் பெற்று வளர்த்த அன்னைக்கும் தருமத்தைப் போதிக்கவேண்டும் என்று விரும்பினார். எனவே ஏழுநாள் வழிநடந்து கிராமத்தை அடைந்ததும், முதற் கண் அவர் வயது முதிர்ந்த தமது அன்னைக்கு உபதேசம் செய்து, புத்த, தரும, சங்கத்தை அடைக்கலமாகப் பெறும் படி செய்தார். பின்னர், ‘அம்மா! என்னைப் பெற்று வளர்த்து, எனக்குக் கல்வி புகட்டி நீ பட்டபாட்டுக் கெல்லாம் இப்போது நான் கைம்மாறு செய்துவிட்டேன். இனி நீ என்னைத் தனியே விட்டு விட்டு அகன்று விட