பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 ⚫ போதி மாதவன்

ஆசிரியர், எதிரே நின்ற ‘இளைஞன் தம்மிடம் கற்க வரவில்லையென்பதையும், தாமே அவனிடம் கற்கவேண்டுமென்பதையும் உடனே உணர்ந்து கொண்டு, மெய்ம்மறந்து நின்றார். அவன் கூறிய பாஷைகளில் சிலவற்றின் பெயரைக்கூட அவர் கேட்டதில்லை! எழுத்தைப் போலவே சித்தார்த்தன் எண்ணிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆசிரியர் முதல் நாளில் நூறாயிரம் வரை சொல்லிக் கொடுக்கலாம் என்று கருதித் தாம் சொல்வதைத் தொடர்ந்து சொல்லி வரும்படி கூறி, இலட்சம் வந்ததும் நிறுத்திக் கொண்டார். ஆனால், சித்தார்த்தன் அதற்கு மேலும் பத்து லட்சம், கோடி, பத்துக்கோடி நூறுகோடியென்று. கோடி கோடியாகச் சொல்லிக், கொண்டிருந்தான். அவன் சொல்லி வந்த எண்கள் கடற்கரை மணலையும், வானத்துத் தாரகைகளையும் கணக்கிடக்கூடிய பெருந்தொகைகளாயிருந்தன.

பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற மகா பண்டிதரான விசுலாமித்தரர் வெகு நேரம் நின்று அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. குழந்தையுருக் கொண்டு விளங்கிய அந்தக் குருநாதனுடைய காலடியில் வீழ்ந்து அவர் வணங்கலுற்றார். ‘ஐயனே! ஆசிரியர்களுக்கு நீயே ஆசிரியன்! உனக்கு நான் குருவல்லன்–நீயே என் குருநாதன்!’ என்று அவர் சித்தார்த்தனைப் பலவகையாகப் பாராட்டிப் புகழ்ந்தார். இளவரசனும் ஆசிரியரிடம் பேரன்பும் பெரும் பணிவும் கொண்டு விளங் கினான். அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்திருப்பினும், அவனுடைய அடக்கம் யாவர்க்கும் ஓர் எடுத்துக் காட்டாக இருந்தது.

எண்ணும் எழுத்தும் கற்றது போலவே அவன் வேறு பல ஆசிரியர்களிடம் வில்வித்தை, குதிரையேற்றம் முதலிய அரசர்க்குரிய கலைகளைப் பயின்று வந்தான். அவனுக்குப் போர்த் தொழில் கற்றுக் கொடுக்க நியமிக்கப்