பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா-பரி-நிருவாணம் ⚫ 405

புஷ்பங்களும், கந்தம் மிகுந்த சந்தனத் துகளும் சாரல் பெய்வதுபோல் பெய்து கொண்டிருந்தன. ஆகாயத்தில் தேவகீதங்கள் முழங்கின; சோலையைச் சுற்றிலும் இன்னிசை ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த அற்புதங்களை யெல்லாம் பார்த்து ஆனந்தர் பெருயப்படைந்தார்.

அப்போது பெருமான் அவரை நோக்கி அந்தநேரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அற்புதங்களால் மட்டும் ததாகதருக்குப் பெருமையில்லை என்றும், ஒவ்வொரு பிக்குவும், பிக்குணியும் தமக்குரிய விநய விதிகளின்படி நடந்து வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டு, சீலத்தில் சிறந்து விளங்குவதே ததாகதரைச் சரியான முறையில் வணங்கிக் கௌரவிப்பதாகும் என்றும் விளக்கிச் சொன்னார்.

அப்போது எதிரே நின்று விசிறிக் கொண்டிருந்த உபாவணரைப் பார்த்துப் பெருமான், ‘ஓ பிக்கு, என் முன்னால் நின்று மறைக்காமல் ஒதுங்கி நிற்கவும்!’ என்று கூறினார். காலமெல்லாம் அவருக்கு ஊழியம் செய்து வந்த தொண்டரை விலகியிருக்கச் சொல்லிய தன் காரணம் என்ன என்று ஆனந்தர் பெருமானை வினவினார். ததாகதரைத் தரிசிப்பதற்காகப் பத்து உலகங்களிலிருந்தும் தேவர்கள் வந்து இச்சோலையைச் சூழ்ந்து நிற்கிறார்கள்; இங்கிருந்து பல காத தூரம்வரை எள்ளும் விழ இடமின்றிச் சுற்றிலும் வல்லமை மிக்க தேவதைகள் குழுமி நிற்கின்றனர். அவர்கள் தரிசிப்பதற்கு இடையூறாக யாவரும் ததாகதரை மறைத்து நிற்கவேண்டாம் என்ப தற்காகவே உபாவணரை ஒதுங்கியிருக்கச் சொன்னேன் என்று பெருமான் கூறினார். ததாகதர்கள் மண்ணுலகில் தோன்றுவதே அபூர்வம்; அவ்வாறு அருமையாகத் தோன்றிய ஒரு ததாகதர் தேவ வியோகமாவதைக் காணவே யாவரும் கூடியிருந்தனர்.

பகவர் சில மணி நேரத்தில் தங்களை விட்டுப் பிரிந்து செல்வது நிச்சயம் என்பதை ஆனந்தர் உணர்ந்து கொண்-