பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406 ⚫ போதி மாதவன்

டார். எவ்வளவு உறுதியுடன் மனத்தை அடக்கி வைத்துக் கொண்ட போதிலும், அவரால் துக்கத்தைத் தாங்க முடிய வில்லை பகவரின் நிழல் போலப் பல்லாண்டுகள் அவரையே தொடர்ந்து சென்று கொண்டிருந்த ஆனந்தர், ‘இனி நமக்குக் கதி யார்?’ என்று ஏக்கமுற்றார். அவருக்கு எப்பொழுதுமே இளகிய மனமுண்டு. மகா காசியபர், சாரீ புத்திரர், மௌத்கல்யாயனர். உபாலி முதலியோரைப் போல, அவர் பெரிய அதிர்ச்சிகளைத் தாங்குதல் அரிது. பண்பாடுபெற்ற பெருந்துறவியே யாயினும், இடையிடையே அவர் உணர்ச்சி வசப்பட்டு உழல்வது வழக்கம். எனவே பெருமானுடைய வாழ்க்கையில் பல சம்பவங்களைபற்றி அவர் எண்ணமிட்டுக் கலங்கியிருக்க வேண்டும். மழைக் காலத்தில் பிக்குக்கள் பலரும் ததாகதருடன் வந்து தங்கியிருக்கையில் அவர் எல்லோருக்கும் உபதேசம் செய்து வந்ததை நினைத்தவுடன், ‘இனி அதற்கெல்லாம் வழியில்லையே!’ என்று அவர் வருந்தினார்.

பகவர் ஆனந்தரைப் பார்த்துப் பேசலானார். தருமத்தில் நம்பிக்கையுள்ள மனிதன் பயபக்தியுடன் யாத்திரை செய்து தரிசிக்க வேண்டிய தலங்கள் நான்கு என்றும், ததாகதர் அவதரித்த இடம், போதியடைந்த இடம், தரும சக்கரப் பிரவர்த்தனம் செய்த இடம், முடிவில் அவர் பேரின்பமடைந்த இடம் ஆகிய நான்குமே அத்திருப்பதிகள் என்றும் கூறினார்.

பெண்கள் சம்பந்தமாகப் பிக்குக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி ஆனந்தர் விசாரிக்கையில், அவர்களைப் பார்க்கவே வேண்டாம் என்றும், பார்க்க நேர்ந்தால் அவர்களுடன் பேச வேண்டாம் என்றும், பேச நேர்ந்தால் மிகவும் லிழிப்போடு இருக்க வேண்டும் என்றும் பெருமான் அருளினார்.

ததாகதர் மகா-பரி- நிருவாணமடைந்த பிறகு பிக்கு செய்யவேண்டிய கிரியைகளைப் பற்றி ஆனந்தர் பகவரின் கருத்தை அறிய விரும்பினார்.