பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா-பரி-நிருவாணம் ⚫ 407

பகவர் கூறியதாவது:

‘ஆனந்தா, ததாகதரின் சடலத்திற்கு மரியாதை செய்வதைப் பற்றி நீ இடர்ப்பட வேண்டியதில்லை! எப்பொழுதும் நீ விழிப்போடிருக்க வேண்டும். ஆனந்தா, உன் நன்மைக்காகவே இதைச் சொல்லுகிறேன். உனது நன்மைக்காக நீயே பாடுபட வேண்டும். ஆர்வத்தோடு இருக்க வேண்டும்; விழிப்போடு இருக்கவேண்டும்: உனது நன்மையிலே நாட்டமாயிருக்கவேண்டும்!

‘ஆனந்தா! க்ஷத்திரியப் பிரபுக்களிலும், பிராமணர்களிலும், கிருகஸ்தர்களிலும் ததாகதரிடம் உறுதியான நம்பிக்கையுள்ள அறிவாளர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் ததாகதரின் உடலுக்குரிய மரியாதையைச் செய்வார்கள்.

இராஜாதி ராஜனின் உடலுக்குச் செய்வது போன்று தமது உடலுக்கும் மரியாதை செய்ய வேண்டுமென்று பெருமான் கூறினார். தமது உடலைத் தைலமாட்டி வைத்திருந்து, கோடித்துணி அணிவித்துப் பலவிதமான கந்தப் பொருள்கள் தெளித்த காஷ்டத்திலே தகனம் செய்ய வேண்டுமென்றும் அவர் விவரமாகத் தெரிவித்தார். சக்கரவர்த்தியின் அஸ்திகளை அடக்கம் செய்து வைப்பதற்கு தாதுகோபம் அமைப்பதுபோல, தம் அஸ்திகளுக்கும் செய்வது உசிதமென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பின்னர் ஆனந்தர் அருகேயிருந்த விகாரையுள்ளே சென்று, ஒரு கதவு நிலையில் சாய்ந்து கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து நின்றார். ‘நான் இன்னும் அருகத்து நிலையை அடையவில்லையே! அதற்குள் பெருமான், என்னைத் தனித்திருக்க விட்டுவிட்டுப் பிரிகின்றாரே!’ என்ற எண்ணத்தினால், அதுவரை அவர் கட்டி வைத்திருந்த கண்ணீர்க்கடல் வெள்ளமிட்டுப் பெருக ஆரம்பித்தது. அதற்குள் வெளியே ஐயன், ‘ஆனந்தன் எங்கே?’ என்று விசாரிக்கலானார். உடனே ஒரு பிக்கு விகாரைக்குள்