பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம் ⚫ 39

பெற்ற ஆசிரியர் சாந்திதேவர் சாக்கியகுல இளைஞர் பலருக்கும் போதித்து வந்தவர், ஆனால், சித்தார்த்தர் தனியேயிருந்து தானே தனக்குப் போதித்துக்கொண்டு வந்தான். மற்றையோர் பல்லாண்டுகள் பயின்ற கலைகளை அவன் சில நாட்களிலே பயின்று வந்தான் எப்பொருளிலும் உட்பொருளை ஒரு கணத்திலேயே அவன் உணர்ந்து விடுகிறானென்றும், எதையும் எளிதில் விளக்கிவிடுகிறானென்றும், அவன் கேள்விகளே அவனது மேதையைத் தெளிவாகக் காட்டுகின்றனவென்றும் ஆசிரியரே வியந்து பாராட்டினார். யானையேற்றம் தேரோட்டுதல், போர் முறைகள் முதலிய பயிற்சிகளிலெல்லாம் அவன் அஞ்சா நெஞ்சம் படைத்த வீரனாக விளங்கிய போதிலும், அவ்வீரத்தோடு அருளும் அடக்கமும் சேர்ந்து பொருந்தியிருந்தன. அவன் ஏறிச் செல்லும் குதிரை களைத்துப் பெருமூச்சுவிட்டால், உடனே அவன் பாய்ச்சலை நிறுத்தி, அதை ஆதரவோடு தட்டிக் கொடுட்பான். பந்தயக் குதிரை ஓட்டத்தின் நடுவே வியர்வை யொழுகக் களைத்து வருந்தினால், அவன் அப்பிராணியிடம் அன்பு காட்டி ஓட்டத்தை நிறுத்திவிட்டுப் பந்தயத்தை இழக்கத் தயாராவான். வனவிலங்குகவை வேட்டையாடச் செல்லும்போதும், மான் முதலிய ஜந்துக்கள் பதறி மிரண்டு விழிக்கும் பரிதாபத்தைப் பார்த்து, வேட்டையாடாமலே திரும்பிவிடுவான்.

கருணை உள்ளம்

வசந்த காலத்தில் ஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனைத் தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயரே வானவீதியிலே தூய வெண்மையான அன்னப்பறவைகள் வடதிசையில் இமயமால்வரையை நோக்கிப் பறந்து சென்று கொண்டிருந்தன. மலையிலேயுள்ள கூடுகளில் காத்துக் கத்திக்கொண்டிருக்கும் தங்கள் குஞ்சுகளிடம் அளவற்ற அன்புடன் அவைகள் ஏதேதோ கூவிக்