பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா-பரி-நிருவாணம் ⚫ 415

உடனே காஷ்டத்தில் தீ தானாகவே பற்றிக்கொண்டது. தகனம் முடிந்த பிறகு வானத்திலிருந்து வழிந்து வந்த வெள்ள நீரால் அனல் அணைக்கப்பெற்றது. ததாகதரின் உடல் தகனமானதில் நீரோ, புகைக்கரியோ சிறிது மின்றி, வைரம் போன்ற அஸ்திகள் மட்டுமே மிஞ்சி யிருந்தன. மல்லர்கள் அவற்றைச் சேகரித்து ஒரு பொற் குடத்தில் வைத்து, அக்குடத்தைத் தங்கள் நகரசபை மண்டபத்திலே கொண்டுபோய் வைத்திருந்தனர். தேவரின் அஸ்திகளுக்கு மரியாதை செய்வதற்காகக் கரகத்தின்மீது எண்ணற்ற மலர் மாலைகளும், வாசனைத் திரவியங்களும் தூவப்பெற்றன. அந்த நாட்டு வழக்கப்படி நாட்டியமும், சங்கீதமும் தொடர்ந்து நடந்து வந்தன.

பின்னால் மகத மன்னர் முதலிய ஏழு நாட்டு மன்னர்கள் புத்ததேவரின் அஸ்திகளில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென்று மல்லர்களுக்குத் தூதனுப்பினார்கள்; மல்லர்கள் முதலில் இணங்கவில்லை. அஸ்திகளுக்காகப் போர்களும் நேரக்கூடிய நிலைமை ஏற்பட்டது. முடிவில் ஆன்றோர்களின் யோசனைப்படி மல்லர்கள் அஸ்திகளை எட்டுப் பங்குகளாக வைத்து, ஏழு பகுதிகளை ஏழு நாட்டவர்க்குக் கொடுத்துவிட்டு, எட்டாவது பகுதியைத் தங்கள் நகரிலே வைத்துக்கொண்டார்கள். அந்த எட்டுப் பகுதிகளான அஸ்திகளையும் எட்டுப் பொற்குடங்களில் அடக்கம் செய்து, ஒவ்வொரு குடத்திற்கும் ஒரு தாது கோபம் கட்டப் பெற்றது. அங்கங்களைப் பாதுகாத்து வைக்கும் ஞாபகச்சின்னமாகிய தாதுகோபத்தைத் ‘தகோபா’ என்று கூறுவது வழக்கமாயுள்ளது.

புத்தர் பெருமான் மகா-பரி - நிருவாணமடைந்த காலம் ‘ஈசான சகாப்தம், 148-ஆம் வருஷத்தில் வைகாசி மாதத்திற் பூர்ணிமையும் விசாக நக்ஷத்திரமும் கூடிய செவ்வாய்க் கிழமையென்பர்’ என்பதாக மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் குறித்-