பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண வாழ்க்கை ⚫ 45

பிறந்த நாளும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த நன்னாளையே போட்டிக்குரிய நாளாக வைத்துக் கொள்ளலாம் என்று மன்னர் கருதியிருந்தார்.

முதலில் இளவரசனுடைய கருத்தை அறிய வேண்டும் என்று கருதி, சுத்தோதனர் அவனை அழைத்துப் பேசினார். ‘மைந்த! உனக்குத் திருமணமாகக் கூடிய வயது வந்து விட்டது. உன் மனத்திற்கு உகந்த பெண் யாராவது இருந்தால் என்னிடம் சொல்லலாம்’ என்று கேட்டார். அந்த விஷயமாகச் சிந்தித்து முடிவு சொல்வதற்கு தனக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று சித்தார்த்தன் கூறினான்.

ஏழு நாட்களாகத் திருமணத்தால் ஏற்படக் கூடிய புதிய நிலைமையைப் பற்றிச் சித்தார்த்தன் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான். ‘ஆசையிலிருந்து வியைளக் கூடியது எல்லையற்ற, தீமையே. ஆசைக் காட்டில் வளர்ந்து முதிரும் மரங்களின் வேர்கள் துயரத்திலும் கலக்கத்திலும் ஊன்றி நிற்பவை. அம்மரங்களின் இலைகள் நஞ்சு போன்றவை. ஆசை அனலைப் போல் எரிக்கும். வாள் போல் வடுவுண்டாக்கும். நான் பெண்கள் துணை விரும்பிப் பெண்களோடு வாழும் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன்; சாந்தி நிறைந்த வனத்திலே ஏகாந்தமாக வசிக்க வேண்டியவன் நான்...ஆயினும், சேற்றிலேயும் தாமரை மலர்கள் மலர்வதில்லையா? மனைவியரோடும் குழந்தைகளோடும் வாழ்ந்தவர்களும் ஞானத்தை அடைய வில்லையா?’ என்றவாறு அவன் ஆலோசனை செய்தான். விவாகம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த பின், தனக்கு மனையாளாக வாய்ப்பலள் பெற்றிருக்க வேண்டிய அழகையும், குணங்களையும் பற்றிய தன் கருத்துக்களையும் தொகுத்து எண்ணிப் பார்த்தான்.