பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண வாழ்க்கை ⚫ 47

யிருப்பாள். நான் மணந்து கொள்ளும் மாது மனம், வாக்கு, காயம் ஆகியவை அனைத்திலும் பரிசுத்தமாயிருப்பாள்!”[1]

இதைக் கேட்டு உளம் மமிழ்ந்த அரசர், தமது அரண்மனைப் புரோகிதரை அனுப்பி, இளவரசனுக்கு ஏற்ற எழிலுடைய நங்கையர் எங்கெங்கு இருக்கின்றனர் என்று விசாரித்தறியும்படி கோரினார். புரோகிதர். கோலிய மன்னர் சுப்பிரபுத்தரின் குமாரி. எழிலரசி யசோதரா தேவியே சித்தார்த்தன் விரும்பிய பண்புகள் யாவும் பொருந்தியவள் என்று கண்டு, அரசர்க்கு அறிவித்தார். சுப்பிரபுத்தர் மன்னரின் மைத்துனரே. ஆயினும் சித்தார்த்தனுக்குப் பெண் கொடுப்பதை அவர் விரும்பவில்லை. ஏனெனில் இளவரசனின் ஜாதக முறைப்படி அவன் விரைவிலேயே எல்லாவற்றையும் துறந்து வனத்திற்குச் செல்லக்கூடும் என்று சோதிடர்கள் கூறிய செய்தியை அவர் அறிந்திருந்தார். தவிரவும் இளவசரன் மன்னர்க்குரிய வில்வித்தை, வாட்போர், மல்யுத்தம், குதிரையேற்றம் முதலியவற்றில் மற்ற இஞைர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறாமல், அரண்மனைகளிலே அடைபட்டிருப்பதாயும் அவர் கருதினார். அவர் கருத்து எப்படியிருப்பினும் பெண் திலகமான யசோதரை, தன்னைத் திருமணம் செய்து கொண்டு மறுநாளே இளவரசன் துறவு பூணுவதாயிருப்பினும். தான் அவனையே கணவனாக அடைய விரும்புவதாகவும், உலகிலே தன்னை மணந்து கொள்ளத் தக்கவர் வேறு எங்கும் இல்லையென்றும் கூறிவந்தாள்.


  1. ஹெரேகல்ட் என்ற பெரஞ்சு ஆசிரியர் எழுதிய ‘புத்தர் வாழ்க்கைச் சரிதை'- ‘The Life of Buddha’ by A. Ferdinand Herold - translated from the French by Paul C Blum.