பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மண வாழ்க்கை ⚫ 51

தேர்ச்சி பெற்ற மங்கையர் பலர் தங்கள் ஆடல்களாலும் பாடல்களாலும், இசைக் கருவிகளாலும் இளவரசனின் கண்ணுக்கும், செவிக்கும், சிந்தைக்கும் இடைவிடாத விருந்தளித்து வந்தனர். இல்லறத்தை மேற்கொண்ட சித்தார்த்தனுக்குக் காமன் மண்டபம் என்று சொல்லத் தக்க மாபெரும் இன்ப மாளிகையொன்றும் கட்டப் பெற்றது. அதைச் சுற்றிலும் உத்தியான வனம் அமைந்திருந்தது. அதிலேயிருந்த செய்குன்றைச் சுற்றி உரோகிணி ஆறு சிரித்து விளையாடிப் பாய்ந்து கொண்டிருந்தது. குன்றுக்கு வடபால், மோனத்திலே அமர்ந்த முனிவர்களைப் போன்ற இமயமலையின் வெள்ளிய சிகரங்கள் விண்ணையளாவி நிமிர்ந்து நின்று கொண்டிருந்தன. வெள்ளிப் பனிவரையும், சுற்றிலும் பசுமை போர்த்து விளங்கிய வனங்களும், அரண்மனையும், உத்தியானமும்—எல்லாமுமே வெளியுலகை மறக்கச் செய்யும் மாண்புடன் விளங்கின.

புதிய அரண்மனை சாக்கிய நாட்டுச் சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிற்று. அதன் கதவுகள் தந்தம் பதித்த சந்தன மரத்தாலானவை; உயரமான மண்டபங்களும், சிற்பங்களும், சிலைகளும், சித்திரங்களும் காண் போர் மனத்தைக் கொள்ளை கொண்டன. வெளியே உலாவிவருவதற்கான நடைபாதைகளில் பளிங்குக் கற்கள் பாவப் பெற்றிருந்தன. பளிங்குக் கற்களால் அமைந்த படிக்கட்டுகளுள்ள தடாகங்கள், பூங்கொடிப் பந்தர்கள், வசந்த மண்டபங்கள் பலப்பல ஆங்காங்கே அமைந்திருந்தன. புறாக்களும், கிளிகளும், மற்றும் பன்னிறப் பறவைகளும் அரண்மனையைச் சூழ்ந்து பறந்தும் கூவியும் இன்புறுத்தி வந்தன. மான்களும் மயில்களும் ஏராளமாய்க் கவலையற்றுத் திரிந்து கொண்டிருந்தன.

இவ்வாறு இயற்கை யழகும், மனிதர் கைபுனைந்து இயற்றிய எழிற் காட்சிகளும், மகளிர் அளித்த இசைகளும்