பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் இயல்

மூன்று காட்சிகள்

‘நிண்றன நின்றன நில்லா என உணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க!

—நாலடியார்

சித்தார்த்தருக்கு வயது இருபத்தொன்பது ஆயிற்று. இவ்வுலகில் வாழும் உயிர்களைப் பற்றியோ, அவைகளின் துயரங்களைப் பற்றியோ ஏதும் அறியாமல், மையலிலே சிக்குண்டு, தமது மாபெரும் மாளிகைகளிலே அவர் சிறைப்பட்டிருந்தார், உலகில் காணப்பெறும் நோய் நோக்காடுகள், இன்பதுன்பங்கள், சுய நலம் காரணமாக மக்களிடையே தோன்றும் போட்டிகள், பொல்லாங்குகள், எல்லா உயிர்களுக்கும் பொதுவாக ஏற்படும் பிணி, மூப்பு, சாக்காடு முதலியவைகளைப் பற்றி அவர் சிந்தித்துப் பார்ப்பதற்கே வழியில்லாதபடி பேரரசர் சுத்தோதனர் தடை செய்து வைத்திருந்தார். தளிர் மேனியும், கரிய கூந்தலும், நிலையற்று அலையும் மருண்ட விழிகளும் கொண்ட எழிலுடைய நங்கையர் கூட்டத்தின் நடுவே, இளவரசர் இரவும் பகலும் இசை வெள்ளத்திலே மிதந்து கொண்டிருந்தார். தோகை மயில்களைப் போன்ற மாந்தர்கள் தங்கள் நடனங்களின் மூலம் அவர் கருத்தைக் கவர்ந்து வந்தனர். எந்த நேரத்தில் எது தேவை என்பதை அறிந்து உடனுக்குடன் அவர் எண்ணத்தை நிறைவேற்றி வைக்க ஆயிரக்கணக்கான பணிப்பெண்களும் ஊழியர்களும் காத்து நின்றனர். எழிலரசி யசோதரை தனது சௌந்தரியத்தாலும், பண்பினாலும் அவர் உள்ளத்தைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டிருந்தாள். இசை, நடனம், காதல்—காதல், நடனம், இசை என்ற முறையில்