பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ⚫ போதி மாதவன்

கொடிகளும், கனிகள் தொங்கும் மரங்களும், பாடித் திரியும் பல நிறப் பறவைகளும் நிறைந்த மன்னரின் சோலை அவர் உள்ளத்தை ஈர்த்தது. கட்டுத்தறியை விட்டுக் கானகத்தில் சுயேச்சயாகத் திரிய வேண்டு மென்று விரும்பும் களிறு போல், அவர் அரண்மனையை விட்டுச் சிறிது நேரமாயினும் வேண்டும் என்று ஆசைகொண்டார்.

முதற் காட்சி

மைந்தரில் நோக்கத்தைக் கேள்வியுற்ற மன்னர் உடனே அங்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் ஈடுபட்டார். சாலைகள் செப்பஞ் செய்யப் பெற்றன. வீடுகளும் வீதிகளும் அலங்கரிக்கப் பெற்றன. கொடிகளும் தோரணங்களும் ஐயனின் வரவை எதிர்பார்த்து ஆடிக் கொடிருந்தன. நகரமக்கள் யாவரும், உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன், திருவிழாக் கோலத்தில் திரண்டு நின்றனர். உயர்தரமான நான்கு வெள்ளைப் புரவிகள் பூட்டிய மணித் தேரும் தயாராக வந்து நின்றது. இளவரசர் முகத்தில் இன்பமும் துன்பமும் கலந்த உணர்ச்சிகளைக் கண்டு சுத்தேதானர், ‘வெளியே இன்பக் காட்சிகளைக் கண்டு வந்தால் அவன் உள்ளம் உவகையுறும் என்று கருதி ஆசி கூறி வழியனுப்பினார்.

இரதமும் புறப்பட்டுச் சென்றது. இளவரசரின் எழில் நலத்தைக் காண்பதற்காக மகளிரும் மைந்தரும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஓடி வந்தனர். நாட்டுப் புறத்திலிருந்தும் திரள் திரளாக மக்கள் வந்தி மத்தார். மாடங்களிலெல்லாம் மகளிரின் மதி முகங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. மந்திரிகளும் மற்ற அதிகாரிகளும் இரதத்தைச் சூழ்ந்து குழுமியிருந்தனர். ஏழைகள், செல்வர்கள், வயோதிகர்கள், வாலிபர்கள்–யாவருடைய கண்களுக்கும் வள்ளல் சித்தார்த்தரின் திருமுகம் நல்விருந்தாக விளங்கிக் கொண்டிருந்தது.